தேவா சிரியன் முறையிருக்குந் தேவ ரெல்லாஞ் சேவித்துப் போவார் தம்மில் வேண்டுவார் போத வொழிந்தார் புறத்தொழிய ஓவா வணுக்கச் சேவகத்தி லுள்ளோர் பூத கணநாதர் மூவா முனிவர் யோகிகளின் முதலா னார்கள் முன்போத, | 332 | (இ-ள்) தேவாசிரியன்...புறத்தொழிய - தேவாசிரியன் திருவாயிலில் வரங்கிடந்து காத்திருக்கும் தேவர்கள் எல்லாரும் சேவித்துப் போவார்களுள் வேண்டுபவர்கள் மட்டும் உடன்போக, ஒழிந்தவர்கள் புறத்திற் போக; ஓவா....முன்போத - நீங்காத திரு அணுக்கத் தொண்டில் உள்ளோர்களும் சிவபூத கணநாதர்களும் மூத்தலில்லாத முனிவர்கள் யோகிகளுள் முதன்மை பெற்றவர்களும் முன்பு செல்ல, (வி-ரை) தேவாசிரியன் முறையிருக்கும் - தேவாசிரியனிடத்துக் குறையிரந்து கிடக்கும்; முறையிருத்தல் - வரங்கிடத்தல்; "பூவார் திசைமுக னிந்திரன் பூமிசை, மாவா ழகலத்து மான்முதல் வானவர், ஓவா தெவரு நிறைந்துறைந்துள்ளது, தேவா சிரிய னெனுந்திருக் காவணம்" (137). வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்தொழிய - வேண்டுவார் - வேண்டத் தகுதியடையோர்; ஒழிந்தார் தகுதியில்லா, ஏனையோர்; போத - உடன்போக. ஓவா அணுக்கச் சேவகத்தில் உள்ளோர் - நீங்காது அணுகிப் பணிபுரிவோர்; பூத கணநாதர் - சிவகணத் தலைவர்கள். மூவா முனிவர் - யோக சாதனையால் மூப்பில்லாத நிலைமை பெற்றவர்கள், "சந்ததமு மிளமையொ டிருக்கலாம்" (தாயுமா). |
|
|