பாடல் எண் :3488

மாலு மயனுங் காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்திறைஞ்சுங்
கால மிது"வென் றங்கவரை யழைத்தா லென்னக் கடல்விளைத்த
ஆல மிருண்ட கண்டத்தா னடித்தா மரைமேற் சிலம்பொலிப்ப
நீல மலர்க்கட் பரவையார் திருமா ளிகையை நேர்நோக்கி,
334

(இ-ள்) மாலும்...என்ன - திருமாலும் பிரமதேவரும் காண்பதற்கரிய இறைவரது தாமரைபோன்ற திருவடிகளைச் சிரமேற்றாங்கி வந்து வணங்குதற்குரிய காலம் இது என்று அவர்களை அழைத்தாற்போல; கடல்விளைத்த...சிலம்பு ஒலிப்ப - கடலில் வந்தெழுந்த விடம் தங்கியதனால் இருள்கொண்ட கண்டத்தினை உடைய இறைவரது திருவடித் தாமரையின்மேல் சிலம்பு சத்திக்க; நீல...நோக்கி - நீலமலர் போன்ற கண்களையுடைய பரவையாரது திருமாளிகையினைக் குறித்து நேர் நோக்கி,
(வி-ரை) காணாதார் - காணுதற்கரியவர்.
காணாதார் வந்திறைஞ்சும் காலம் இது என்று அவரை அழைத்தா லென்ன - அவர்கள் முயன்றும் முன்னாக காணாதார் இங்கு எளிதில் கண்டு இறைஞ்சத்தக்க காலமிது என்று அவ்விருவரையும் அழைத்தது போலச் சிலம்பு ஒலித்தன என்பது. "திருச்சிலம் போசை ஒலிவழியே சென்று, நிருத்தனைக் கும்பிடென்றுந் தீபற" (உந்தி); திருவடியை அணுகச் செய்து உயிர்களை முத்திநெறி கூடச்செய்தல் சிலம்பின் ஒலியின் பயனாதலின் அழைத்தால் என்ன என்றார்; என்ன - உவமவுருபு; வினைபற்றிய உவம முள்ளுறுத்த தற்குறிப்பேற்ற அணி.
காலம் இது - "இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம்" (4); "காலமுண்டாகவே காதல் செய்துய்ம்மின்...பிரான்றன் னடியவர்க்கு, மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே" (5) (திருவா - பாண்டிப் பதிகம்) என்ற திருவாக்குக்களின் கருத்துக்கள் ஈண்டுக் கருதத்தக்கன.
அவரை - "மாலும் அயனும்" என்ற அவ்விருவரையும்.
கடல் விளைத்த ஆலம் - விளைத்த - விளைவிக்கப்பட்ட; கடலில் விளைவிக்கப்பட்ட என்பதைக் கடல் விளைத்த என்றுபசரித்தார்; இடத்து நிகழ் பொருள் இடத்தின்மேல் ஏற்பட்டது. ஆலம் இருண்டகண்டம் - ஆலம் - விடம்; ஆலமிருண்ட - ஆலத்தால் இருண்ட.
நீல மலர் - குவளை; இது பெண்களின் கண்ணுக்கு உவமிக்கப்படும்; நீலமலர் போன்ற கண்; மெய் பற்றிய உவமம்.
நேர் நோக்கி - நேராக அதனையே குறிவைத்து.
குறிப்பு:- 3486-3487-3488 இம்மூன்று பாட்டுக்களும் சில பிரதிகளில் இல்லை.