இறைவர் விரைவி னெழுந்தருள வெய்து மவர்கள் பின்றொடர அறைகொ டிரைநீர் தொடர்சடையி லரவு தொடர, வரிய விளம் பிறைகொ ளருகு நறையிதழிப் பிணையல் சுரும்பு தொடர,வுடன் மறைக டொடர, வன்றொண்டர் மனமுந் தொடர வரும்பொழுது, | 335 | (இ-ள்) இறைவர்...எழுந்தருள - இறைவர் விரைவாக எழுந்தருள; எய்து....பின்றொடர - முன் கூறியவாறு பொருந்த வருகின்ற அவர்களெல்லாம் அவர்பின் தொடர்ந்து வர; அறைகொள்.....அரவு தொடர - சத்தித்து வரும் அலைகளையுடைய கங்கைநீர் பொருந்திய சடையில் பாம்புகள் தொடர; அரிய....சுரும்பு தொடர - அருமையாகிய இளம்பிறையின் அருகே தேன் பொருந்திய கொன்றை மாலையில் வண்டுகள் தொடரவும்; உடன் மறைகள் தொடர - உடனே வேதங்கள் தொடரவும்; வன்றொண்டர் மனமும் தொடர - இவற்றோடும் வன்றொண்டரது மனமும் உடன் தொடரவும்; வரும்பொழுது - இவ்வாறாக வரும்பொழுது. (வி-ரை) திருவீதியில் இறைவர் எழுந்தருளும் பொழுது அவரைத் தொடர்ந்து சென்றாரையும் சென்ற பொருள்களையும் கூறுவது இத்திருப்பாட்டு. எய்துமவர்கள் - முன் மூன்று பாட்டுக்களினும் குறிப்பிட்டவர்கள். இவர்கள் இறைவரது பின் தொடர்ந்தவர்கள். அறைகொள்....சுரும்பு தொடர - நீர் தொடர் சடையில் அரவும், பிறையினருகு இதழிப் பிணையலில் சுரும்பும் தொடர; அறை - ஓசை; இரைச்சல்; இறைவருடனே திருமேனித் தொடர்பு கொண்டன. உடன் மறைகள் தொடர - இறைவரைத் தம்முள் வைத்தலால் உடன் தொடர்ந்தன. வன்றொண்டர் மனமும் தொடர - வன்றொண்டர் திருமேனி மட்டில் தேவாசிரியன் மருங்கு நின்றதன்றி, அவரது மனம் இறைவரைப் பின்பற்றிச் சென்றது என்பதாம்; உம்மை முன்கூறிய ஏனையவையே யன்றி மனமும் என இறந்தது தழுவிய எச்சவும்மை; இனி, மனமும் என்பதற்குப் பிரியாது சிவயோக நிலையிற் கூடியிருக்கும் நம்பிகளது மனமும் என்று சிறப்பும்மை யாக்கி உரைத்தலுமாம்; பிரியாது கூடியிருந்தாலும் இங்கு உலகியல் நிலையில் நடிப்பார் போன்று இறைவர் போதலும் அவர் மனந் தொடர்தலுமாகிய செயல்கள் நிகழ்ந்தன என்பதாம்."ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே யிடைக்கே, எறிவிழியின் படுகடைக்கே கிடந்து மிறை ஞானங், கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக் குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே யிருப்பர்" (சித்தி-10) என்ற கருத்து ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. உலகியல் நிலையில் இவ்வாறு நம்பிகள் மனந்தொடர்ந்த தன்மைபற்றி மேல் 3502-3503 பாட்டுக்களிற் கூறுதல் காண்க. இத்திருப்பாட்டு மிகுந்த இசை நயமும் பொருணயமும் கவிநயமும் பொருந்தி விளங்குவதாகும். |
|
|