பாடல் எண் :3490

பெருவீ ரையினு மிகமுழங்கிப் பிறங்கு மதகுஞ் சரமுரித்து
மருவீ ருரிவை புனைந்தவர்தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால்
திருவீ தியினி லழகரவர் மகிழுஞ் செல்வத் திருவாரூர்
ஒருவீ தியிலே சிவலோக முழுதுங் காண வுளதாமால்.
336

(இ-ள்) பெருவீரையினும்...நெருங்குதலால் - பெரிய கடலினும் மிக்க முழக்கம் செய்து விளங்கும் மதயானையினை உரித்து அத்தோலைப் போர்த்த அப்பெருமானது பக்கத்தே முன் கூறியபடி சூழ்ந்து வருவார்கள் நெருங்கி வருதலாலே; திருவீதியினில்....உளதாமால் - திருவீதியில் எழுந்தருளும் அழகராகிய இறைவர் மகிழும் அச் செல்வத் திருவாரூரின் ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாயிற்று.
இந்த ஆறு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
(வி-ரை) பெருவீரை - பெரிய கடல்.
சூழ்வார் - முன் நான்கு திருப்பாட்டுக்களிலும் கூறப்பட்ட பல்வேறு திறத்தினர்.
திருவீதியினில் அழகர் - வீதியில் எழுந்தருளிய அழகராகிய வீதிவிடங்கர்.
திருவாருர் ஒரு வீதியிலே சிவலோக முழுதுங்காண - சிவலோகமுழுதும் என்றது சிவலோகத்துட் காணப்படுவோர் இத்திருவீதியிலும் காணப்படுதலால் ஒப்புமை கூறப்பட்டது. நெருங்குதலால் - காண உளதாமால் என்று கூட்டுக.
வீதியிலே என்றார் இங்குச் சூழ்வோர் அனைவரும் வீதி அளவில் நின்றுவிட, இறைவர் மட்டும் தம்மைப் பூசிக்கும் அந்தணர் வடிவுடன் இம்முறையில் திருமாளிகையினுள் எழுந்தருளுதல் குறிப்பு. மேல் வரும் முறையில் இறைவர் தாமாந்தன்மை அறிவுறு கோலத்தோடு மருங்கு சூழும் கணத்தவர் முதலிய அனைவருடன் மாளிகையினுள் எழுந்தருளுதலால் ‘மாளிகை தென்பாற் சீர்வளர் கயிலை வெள்ளித் திருமலை போன்ற தன்றே" (3516) என்பது காண்க.
அழகர் - இறைவர்; மகிழும் செல்வத் திருவாரூர் - திருத்தாண்டகப் பதிகங்களும் பிறவும் காண்க.
ஒரு வீதியிலே முழுதும் காண - ஒரு - சுட்டுப் பொருள் தந்து நின்றது; ஏகாரம் பிரிநிலை; உம்மை - முற்றும்மை. காண - காண்பதுபோல.
உளதாமால் - cகாலமயக்கம்; உரிமை - உரித்தலால் பெறப்படுவது.