பாடல் எண் :3492

சென்று மணிவா யிற்கதவஞ் செறிய வடைத்த வதன்முன்பு
நின்று "பாவாய்! திறவா"யென் றழைப்ப, நெறிமென் குழலாரும்
ஒன்றுந் துயிலா துணர்ந்தயர்வா "ருடைய நாதன் பூசனைசெய்
துன்றும் புரி நூன் மணிமார்பர்போலு மழைத்தா" ரெனத்துணிந்து,
338

(இ-ள்) சென்று....அழைப்ப - முன்கூறியவாறு தனியே சென்றணைந்து நெருங்க அடைத்த அழகிய அவ்வாயிற் கதவத்தின் முன்பு நின்று, "பாவையே! கதவந்திறவாய்" என்று அழைத்திட; நெறிமென்........அயர்வார் - நெறித்த மெல்லிய கூந்தலையுடைய பரவையாரும் ஒரு சிறிதும் துயிலாமல் விழித்திருந்து வருந்துபவர்; உடைய நாதன்.......எனத்துணிந்து - என்னை ஆளுடைய இறைவரது பூசையினைச் செய்யும் நெருங்கிய முப்புரிநூலினை அணிந்த மார்பினையுடைய முனிவர் போலும் வந்தழைத்தனர்?" என்று துணிந்து,
(வி-ரை) செறிய அடைத்த கதவமதன் முன்பு -என்க.
செறிய - நெருங்க; நன்றாக; பிணக்கினால் எளிதிற் றிறக்க வியலாதபடி அடைத்த என்ற குறிப்பு.
பாவாய் என்றழைத்துக் கடை திறவாய் - என்ன - என்க.
கடை- (கதவம்) என்பது வருவிக்க; பாவாய்! அடைத்த கதவின் முன்வெளி நிற்பவர்கள் உள் இருப்போரை விளித்து உரைத்தல் பற்றி அழைத்தார்; "அஞ்சொலீர்! பலி! என்னும்" (தேவா -ஐயாறு.); "வாட்டடங்கண் மாதே" "நேரிழையாய்" (திருவா-திருவெம்.)
நெறிமென் குழலார் - பரவையார்; நெறி - நெறித்தலாவது கருமணல் ஒழுங்கு போலச் சிறு சுருள்களுடன் தொடர்ந்து இருத்தல்; மென்மை - மெல்லிய மயிர்களுடைம உயர்ந்த இலக்கணம்.
ஒன்றும் துயிலாது உணர்ந்து - ஒன்றும் - ஒரு சிறிதும்; காலத்துவந்து பொருந்தத்தக்க என்றலுமாம்; ஒன்றுதல் - பொருந்துதல்; துயிலாது - துயில் பெறாது; உணர்ந்து - விழித்து இருந்து.
உடைய பெருமான் - தம்மை ஆளுடைய நாயகராகிய புற்றிடங் கொண்ட இறைவர்.
துன்றும் புரிநூல் மணிமார்பர் - சிவ வேதியராகிய அந்தணர்.
போலும் அழைத்தார் போலும் - முழுதும் துணிவு பெறாத நிலை; அதன் காரணம் வரும் பாட்டிற் கூறுவது காண்க; உயர்ந்த நிலையில் உள்ள அவர், காலமும் இடமும் தகாத நிலையில் வந்தமை ஐயப்பாட்டின் துணிவு பெறாமைக்குக் காரணம்.
துணிந்து - அழைத்தவர் இன்னார் என்பதை மட்டில் துணிந்து; ஏனைக் காரணம் முதலியவை துணியாமை மேற்காண்க.
பாவா யென்றழைப்ப - நெறித்துச் சுழல் மென் குழலாரும் - என்பதும் பாடம்.