"பாதி மதிவாழ் முடியாரைப் பயில்பூ சனையின் பணிபுரிவார் பாதி யிரவி லிங்கணைந்த தென்னோ?" வென்று பயமெய்திப் பாதி யுமையா டிருவுருவிற் பரம ராவ தறியாதே பாதி மதிவா ணுதலாரும் பதைத்து வந்து கடைதிறந்தார். | 339 | (இ-ள்) பாதி....பயமெய்தி - பிறைச்சந்திரன் வாழ்தற்கிடமாகிய சடைமுடியினை உடைய இறைவரை விளக்கமுடைய பூசனையின் பணிசெய்கின்ற முனிவர் நடு இரவில் இங்கு வந்தணைந்த காரியம் யாதோ என்று அச்சமெய்தி; பாதி.....அறியாதே - அவர் தமது திருவடிவிற் பாதியாகிய ஒரு கூற்றிலே உமையம்மையாரையுடைய பரமரே ஆவர் என்பதை யறியாமல்; பாதிமதி....திறந்தார் - அரைச்சந்திரன் போன்ற நெற்றியையுடைய பரவையாரும் பதைப்புடனே வந்து வாயிலைத் திறந்தனர். இந்த இரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன. (வி-ரை) பாதிமதி - முதிராத இளம்பிறை; பாதி - வளர்ச்சிக் குறையுடைய என்ற மட்டில் பொருள் தந்து நின்றது. பயில் பூசனையின் பணி - பயில் - விளங்கும்; சிறந்த பிறப்பினின்றும் பழகிய என்ற குறிப்புமாம். இன் - பூசனையாகிய இனிய பணி; இனிமை - தமக்கும் உலகுக்கும் வீடுபேறாகிய பயன் தருதல்.பாதி இரவில் இங்கு அணைந்தது என்னோ என்று பயம் எய்தி - பாதி இரவு - வரத்தகாத நேரம்; (ழுபேயு முறங்கும் பிறங்கிருள் வாய்" (3476);) என்பதும் இங்கு - வரத்தகாத இவ்விடத்து என்பதும் குறிப்பு. பயம்எய்தி - தம்பாலுள்ள குறை காரணமாமோ என்ற நினைவினால் வந்த அச்சம். பாதி யுமையாள்.....அறியாதே - வந்து அழைத்தவர் சிவபெருமான் என்பதைச் சிறிதும் தெரியலாற்றாது; அக்குறிப்புக்கள் தானும் அறிந்த இடத்துப் பரவையார் கொண்ட மனமழிந்த நிலையினை மேல் (3513-3514) உரைப்பது காண்க; அறியாதே - அறிந்திருப்பாராயின் இங்கு, மேல் (3495 -3499) வருமாறு மறுத்து வலிந்துரைத்திருக்க மாட்டார் என்பது குறிக்க அறியாதே என்று அமைதி வகுத்தமை காண்க. பாதி மதிவாள் நுதலார் - பரவையார்; பாதிமதி-அரைப்பிளவாகிய சந்திரன். அர்த்த சந்திரன் என்பர். இது பெண்ணின் நெற்றிற்கு செய்யும் உருவும் பற்றி உவமிக்கப்படும்; வாள் நுதல் என்ற குறிப்புமிது; பாதிமதி - மதி -புத்தி - ஆலோசனை என்ற குறிப்புடன் - இந்நிலையில் புத்திக் குறைவுடனின்ற என்ற பொருளுந்தரநின்றது;" தேய் மதியன்" (திருவா) என்பழிப்போல. பதைத்து - பதைத்தல் பயத்தின் விளைவு; கடை - கதவம். குறிப்பு:- இந்நிலையில் இறைவரது தூது பாதிப் பயனுடன் நின்று மீண்டும் வருதலுடன்முழுப்பயனும் தந்து நிறைவாவது என்ற குறிப்புத்தர இப்பாட்டில் பாதி என்று நான்கடியிலும் எதுகை வைத்து சொற் பொருட் பின்வரு நிலையில் அருளிய கவிநயமும் கண்டுகொள்க. |
|
|