பாடல் எண் :3494

மன்னு முரிமை வன்றொண்டர் வாயிற் றூதர் வாயிலிடை
முன்னின் றாரைக் கண்டிறைஞ்சி"முழுது முறங்கும் பொழுதின்கண்
என்னை யாளும் பெருமானிங் கெய்தி யருளி னாரென்ன
மின்னு மணிநூ லணிமார்பீ! ரெய்த வேண்டிற் றென்?"னென்றார்.
340

(இ-ள்) மன்னு...இறைஞ்சி - நிலைபெற்ற தோழராகும் உரிமையுடைய வன்றொண்டரது காரணமாக வரும் தூதராகிய இறைவர் வாயிலின் முன்னே நின்றாரைப் பரவையார் கண்டு வணங்கி; முழுதும்......கண் - உலகத்துயிர்கள் யாவையும் துயிலும் இந்த நடு இரவிலே என்னை யாளுடைய இறைவரே இங்கு எழுந்தருளி வந்தார் என்பதுபோல, விளங்கும் அழகிய நூலணிந்த மார்பினை யுடையவரே! தேவரீர் இங்கு வரவேண்டிய காரணமென்ன? என்று வினவினார்.
(வி-ரை) உரிமை....தூதர் - தோழராகும் உரிமையினாலே விடுக்கப்பட்டுப் போந்த அவரது தூதர்; நம்பிதூது விடுத்தற்கும் இறைவர் இசைந்து தூதுசெல்வதற்கும் இருபாலும் ஒன்று போலவே தோழராந்தன்மையே உரிமை தந்தது என்பதாம்.
வாயில் - காரணம்; வாயில் தூதர் - வாயிலாக வரும் தூதர். வாயிற்றூதர் - வாயிலிடை; சொற்பின் வருதலை; வாயில் - திருமாளிகை வாயில்;
தூதர் நின்றாரை - தூதராய் வந்து நின்றாரை.
முழுதும் உறங்கும் பொழுது - உலகத்துள்ள உயிர் வருக்கமெல்லாம் துயிலும் நள்ளிரவு.
என்னை....என்ன - என்னையாளுடைய நாயகராகிய இறைவரே (சிவபெருமானே) இங்கு நேரில் எழுந்தருளி வந்தாற்போல; என்ன - போல; உவம உருபு; அருச்சிக்கும் முனிவர்வந்தது இறைவரே வந்தருளியது போலாம் என்க. அருச்சகரையே இறைவராகக் கொண்டு வணங்கும் மரபும் குறிப்பு. என்ன - என்ற உண்மைக் குறிப்பு உட்பெற என்றுரைக்க நின்றமையும் காண்க.
எய்த வேண்டிற்று என்? -இங்கு வரவேண்டிய காரணம் என்ன? வேண்டிற்று - வேண்டும் குறை.
என்றார் - என்று வினவினார்.
விடுத்த தூதர் - மார்பர் - என்பனவும் பாடங்கள்.