கங்கைநீர் காந்த வேணி கரந்தவ ரருளிச் செய்வார் "நங்கை நீ மறாது செய்யி னான்வந்த துரைப்ப" தென்ன, அங்கயல் விழியி னாரு "மதனைநீ ரருளிச் செய்தால் இங்கெனக் கிசையு மாகி லிசையலா" மென்று சொல்லி. | 341 | (இ-ள்) கங்கை நீர்....அருளிச் செய்வார் - கங்கை யாற்றுப் பெருக்கினைக் கரந்துள்வைத்த சடையினை மறைத்து வந்த இறைவர் அருளிச் செய்வாராகி; நங்கை....என்ன - நங்கையே! நீ மறுக்காமல் அதனுக் கிணங்குதல் செய்வாயாகில் நான் வந்த செய்தியினை உரைக்கலாம் என்று கூற; அங்கயல்...சொல்லி - அழகிய கயல்மீன் போலும் கண்களை உடைய பரவையாரும் அதனை நீர் இன்னதென்று முன்னர் அருளிச் செய்தீரானால் ஈண்டு அஃது எனக்கு இசைவதே யாகில் இணங்குதல் கூடும்" என்று கூறி, (வி-ரை) நீர் கரந்த வேணி கரந்தவர் - சொல்லணி; நீர் கரந்த - பெருநீரினை வெளிப்படாது உள்ளே அடக்கிவைத்த; கரந்தவர் - மறைத்தவர்; அர்ச்சகர் வேடமாய் வந்தாராதலின் சடையினையும் தாமாந்தன்மையினையும் கரந்தார். நங்கை - பெண்களி லுயர்ந்தவரைக் குறிக்கும் மகடூஉச் சிறப்புப் பெயர்; "அவர் நங்கை பரவையார் - (293). செய்யின் - நான் வந்த காரியத்தை எடுத்து உரைக்கும்படி செய்வாயாகில்; உரைப்பது - உரைக்கப்படுவதாம். அதனை - வந்த காரணத்தினை; முன்னம் அருளிச் செய்தால் என்க; முன்னம் என்பது குறிப்பெச்சம். இங்கு எனக்கு இசையுமாகில் இசையலாம் - தேவரீர் வந்த காரியம் என்மனதிற் கிசையுமாகில் செய்ய இசையலாம்; மனதிற் கிசைதல் - மனம் பொருந்துதல்; மனதிற்குப் பொருந்தினும் தம்மாற் செய்தற் கியல்வது - செய்யக்கூடியதாதலும் வேண்டும்; அதனை மேல்வரும் பாட்டிற்"பின்னைய தியலுமாகில்" (3496) என்று கூறுதல் காண்க; இயல்வதாயினும் மனமிசையாதாயின் செய்யக்கூடாமையாதலின் அதனை முதற்கண் இங்குக் கூறினார். |
|
|