"என்னினைந் தணைந்த தென்பா லின்னதென் றருளிச் செய்தால் பின்னைய தியலு மாகிலா" மெனப், பிரானார் தாமும் "மின்னிடை மடவாய்! நம்பி வரவிங்கு வேண்டு"மென்ன, நன்னுத லாருஞ் சால நன்று!நம் பெருமை" யென்பார், | 342 | (இ-ள்) என் நினைந்து ......ஆம் என - என்னிடம் எதை எண்ணித் தேவரீர் அணைந்தது என்று அருளிச் செய்யின் அதன் மேல் அஃது இயல்வதேயாயின் என்னால் ஆகும் என்று கூற; பிரானார் .....என்ன - இறைவனாரும் மின் போன்ற இடையினை உடைய பெண்ணே! இங்கு நம்பி வர வேண்டுவதேயாம் என்று சொல்ல; நன்னுதலாரும்......என்பார் - அது கேட்டுப் பரவையாரும் மிகவும் நன்று; நமது பெருமை இருந்தவாறு என்பாராய். (வி-ரை) என்னினைந்து என்பால்அணைந்தது அதனை இன்ன தென்று - என்க; பின்னை - அதன்மேல்; அவ்வாறருளிச் செய்ததன்பின்; ஆம் - செய்யலாகும்; இசையலாகும். நம்பி இங்கு வரவேண்டும்; அதுவே நான் நினைந்து உன்பால் வேண்டிவந்தது என்ன என்க. அதுவே நான் நினைந்து உன்பால் வேண்டி வந்தது என்பதுஇசையெச்சம். வேண்டும் என்ன - வேண்டுதல் வேண்டாமையிலராயும், தம்பால் யாவரும் வேண்டுவன வேண்டுவதல்லது தாம் ஒருவரை எதுவும் வேண்டும் நிலையில்லாராயும் உள்ள இறைவர் இவ்வாறு வேண்டுவது பரவையாரது தவப்பெருமை! என்க. சால நம்பெருமை - இகழ்ச்சிக் குறிப்புப்படக் கூறியது; அற்றாயினும் உண்மைக் குறிப்பும் பட நிற்பதும் காண்க. வரப்பெற வேண்டும் - என்பதும் பாடம்.
|
|
|