பாடல் எண் :3497

"பங்குனித் திருநா ளுக்குப் பண்டுபோல வருவா ராகி
யிங்கெனைப் பிரிந்து போகி யொற்றியூ ரெய்தி யங்கே
சங்கிலித் தொடக்குண் டாருக் கிங்கொரு சார்வுண் டோ?நீர்
கங்குலின் வந்து சொன்ன காரிய மழகி" தென்றார்.
343

(இ-ள்) பங்குனி....வருவாராகி பங்குனித் திருவிழாவுக்காக வழக்கம் போல மீண்டு வருவாராகி; இங்கெனைப் பிரிந்து போகி - இங்கு என்னைவிட்டுப் பிரிந்து சென்று; ஒற்றியூர்....சார்வுண்டோ? திருவொற்றியூரினைச் சார்ந்து அங்கே சங்கிலித் தொடக்கினாலே பிணைக்கப்பட்ட அவருக்கு இங்கு வருவதற்கு ஏற்ற சார்வும் ஒன்றுண்டோ?; நீர்....என்று - நீர் இந்த நடு இராத்திரியில் வந்து மேற்கொண்டு சொன்ன இக்காரியம் மிக அழகியதாம்"என்று சொன்னார்.
(வி-ரை) பங்குனித் திருநாளுக்குப் பண்டுபோல் வருவா ராகி; இது நம்பிகள் முன்னை நாள்களில் எல்லாம் சென்று வந்த முறைமை, திருவாரூரினின்றும் பிரிந்து எங்குச் சென்றாலும் அங்கங்கும் பொன்பெற்றுப் பண்டு போலத் திருவாரூருக்குப் பங்குனி விழாவுக்கு மீண்டுவரும் வழக்கு; இம்முறை அவ்வாறு பிழைத்துத் திருவொற்றியூர் சென்று சங்கிலித் தொடக்குண்டார் என்ற கருத்து மேல் உரைக்கப்படுதல் காண்க.
சங்கிலித் தொடக் குண்டாருக்கு - சங்கிலித் தொடக்கு - சங்கிலியாரை மணந்து கட்டுண்டு - சங்கிலியாலே பிணைப்பட்டு என இருபொருள்படவந்த சிலேடை; சங்கிலி போன்று பிணைக்கும் சங்கிலியார் என்ற உவமத்தினையும் உள்ளுறுத்தி நிற்பது காண்க; "என்னா ருயிரு மெழின்மலருங் கூடப் பிணைக்குமிவன்" (3384), "சிந்தைநிறை காவா தவர்பாற் போய்வீழ" (3381), "என்னை யுள்ளந்திரிவித்தாள்" (3382) என்பன முதலியவை காண்க. திருவொற்றியூரினின்றும் பிரியாமைக்குச் சபதத்தாற் கட்டுண்ட சரித நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்த பிறவும் குறிப்பு.
இங்கு ஒரு சார்வு உண்டோ? - சார்வு - சாரத்தக்க பற்று; சார்வு - சாரும் பொருள்.
அழகிது - இகழ்ச்சிக் குறிப்பு. நீர் - இதனை மேற்பூண்டு வரத்தகாத நீர் என்பதும், கங்குலின் - வரத்தகாத நேரம் என்பதும், வந்து சொன்ன - சொல்லவும் தகாததனைச் சொன்ன என்பதும் குறிப்பு. 3499 பார்க்க.