நாதரு மதனைக் கேட்டு "நங்கைநீ நம்பி செய்த ஏதங்கண் மனத்துக் கொள்ளா தெய்திய வெகுளி நீங்கி நோதக வொழித்தற் கன்றோ நுன்னையான் வேண்டிக் கொண்ட தாதலின் மறுத்தல் செய்ய வடா" தென வருளிச் செய்தார். | 344 | (இ-ள்) நாதரும் அதனைக் கேட்டு - இறைவரும் அம்மொழியைக் கேட்டு; நங்கை நீ.....நீங்கி - நங்கையே! உன்பால் நம்பி செய்த குற்றங்களை மனத்துள் வையாது, பொருந்திய புலவியினை நீங்கி; நோதகவு.....வேண்டிக் கொண்டது - துன்பஞ் செய்யும் தன்மையினை நீக்குதற் கல்லவோ உன்னை நான் வேண்டிக் கொண்டேன்; ஆதலின்....அருளிச் செய்தார் - ஆதலாலே நீ என் சொல்லினை மாறுபாடு செய்தல் தகாது என்று அருளிச் செய்தனர். (வி-ரை) நங்கை நீ - செற்றந் தணிப்பதற்கு நங்கை - என உயர்ச்சிக் குறிப்புப்பட விளித்தவாறு. நம்பி - என்று கூறியதும் அக்குறிப்பு. ஏதங்கள் - அவை பலவாயினும் அவை எல்லாம் மனத்துக் கொள்ளாதொதுக்கற்பாலன என்பது குறிப்பு. நோதகவு - நோவுறுத்தலின் தன்மை; நோ - துன்பமுறுதல்; முதனிலைத் தொழிற் பெயர். தகவு - தன்மை; நோவுதக என்பர் அடியார்க்கு நல்லார். "நான்.......அடாது" என - நான் வேண்டிக்கொண்டதன் பொருட்டாதல் மறுத்தல் செய்ய அடாது. செய்ய - செய்தல். நோதக வொழிதற்கு - என்பதும் பாடம். |
|
|