பாடல் எண் :3499

அருமறை முனிவ ரான ஐயரைத் தைய லார்தாம்
"கருமமீ தாக நீரிக் கடைத்தலை வருகை மற்றும்
பெருமைக்குத் தகுவ தன்றா;
லொற்றியூ ருறுதி பெற்றார்
வருவதற் கிசையே னீரும் போ"மென மறுத்துச் சொன்னார்.
345

(இ-ள்) அருமறை......தையலார்தாம் - அரிய மறைமுனிவராய் வந்த இறைவரை நோக்கிப் பரவையாரும்; கருமமீதாக....தகுவதன்றால் - குறித்த செயலிதுவேயாக மேற்பூண்டு நீர் இந்த வாயிலின்கண் வருவது மேலும் உமது பெருமைக்குத் தக்கதன்றாகும்; ஒற்றியூர்......போமென - ஒற்றியூரின்கண் நிலைபேறு உடைய உறுதியினைப் பெற்ற அவர் இங்கு வருவதற்கு நான் இசையமாட்டேன்; நீவிரும் போமின் என்று; மறுத்துச் சொன்னார் - எதிர்மறுத்துக் கூறினர்.
(வி-ரை) மறை முனிவரான ஐயர் - ஆன - ஆக்கச்சொல் அவ்வேடம் பூண்டு வந்த என்ற பொருடந்து நின்றது; ஐயர் - பெருமையுடையோர்; யாவர்க்கும் மேலாம் பெருமையுடைய இறைவரைக் குறித்து நின்றது.
கருமம் ஈதாக - இஃதும் ஒரு செய் தொழிலாகக் கொண்டு இழிவு சிறப்பும்மை தொக்கது; மீதாக - என்று கொண்டு இதனை ஒரு மேம்பட்ட செயலாக வைத்து என்றலுமாம்.
இக்கடைத்தலை - இவ்வாயிலின் கண்; கண் - ஏழனுருபு. வாயிலினின்றவாறே இப் பேச்சுக்கள் நிகழ்ந்தன என்பது குறிப்பு; வீட்டினையே இவ்வாயில் என்றார் என்பதுமாம்.
மற்றும் - மேலும்; உம்பெருமை - உடைய பெருமானது பூசனை செய்யும்அருச்சகராகிய உமது பெருமை; திருவாரூர்ப் புற்றிடங் கொண்ட பெருமானை அருச்சிக்கப் பெற்ற பிறவி பெரும் பேறுடையது என்பதாம்; அஃதன்றியும் முப்போதுந் திருமேனி தீண்டுவாராயும், திருவாரூர்ப் பிறந்தாராயும் உள்ள பல சிறப்புக்களையும் குறித்தது. மற்று உம் பெருமை - மேற்கொண்ட இவ்வேடமேயன்றி அதனுள் மறைந்துள்ள உமது உண்மை நிலையின் பெருமை என்றதும் குறிப்பு.
ஒற்றியூர் உறுதி பெற்றார் - உறுதி - நிலைபேறான தன்மை; சங்கிலியார் திருமணமும் சபதமும் குறித்தது;மணம் பற்றித் தொடர்ந்த இல்வாழ்க்கைத் தன்மை.
உறுதி பெற்றார்வருவதற் கிசையேன் - உறுதி பெற்றமையால் - பெற்றாராதலின் எனக் காரணக் குறிப்புடன் நின்றது.
நீரும் போம் - மீக்கொண்ட வெகுளிக்குறிப்பு.
கரும மீதாகில் - வருதல் நுத்தம் - என்பனவும் பாடங்கள்.