பாடல் எண் :3500

நம்பர்தா மதனைக் கேட்டு நகையுமுட் கொண்டு மெய்ம்மைத்
தம்பரி சறியக் காட்டார் தனிப்பெருந் தோழ
னார்தம்
வெம்புறு வேட்கை காணுந் திருவிளை யாட்டின் மேவி
வம்பலர் குழலி னார்தா மறுத்ததே கொண்டு மீண்டார்.
349

(இ-ள்) நம்பர்தாம்....காட்டார் - இறைவனார் அம்மாற்றத்தினைக் கேட்டுச் சிரிப்பினையும் உள்வைத்து, தமது மெய்யாகிய பரிசினை அவர் அறியும்படி வெளிக்காட்டாராகி; தனி...மேவி - தமது ஒப்பற்ற பெருந் தோழராகிய நம்பியினது மனம் வெதும்பும் வேட்கையினைக் காணுகின்ற திருவிளையாட்டினை மேற்கொண்டு; வம்பலர்.....மீண்டார் - மணம் கமழ்கின்ற கூந்தலையுடைய பரவையார் மறுத்துரைத்த அம்மொழியினையே ஏற்றுக்கொண்டு மீண்டருளினர்.
(வி-ரை) நகையும் உட்கொண்டு - தம்மை அறிந்து கொள்ளாத நிலையிற் பரவையார் மொழிந்தது கண்டு போந்த சிரிப்பினை வெளிக்காட்டாது.
தம் மெய்ம்மைப்பரிசு - என்க; "தாமாந்தன்மை" (3515); அறியக்காட்டார் - "காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" (தேவா) என்றபடி இறைவர் நேரே, வெளிப்பட்டு எழுந்தருளி நின்றாலும், அவர், தம்மை அறியக் காட்டினாலன்றி உயிர்கள் அவரை அறியும் ஆற்றலில்லையாதல் பின்னர்க் காட்ட நிற்பது மேற்காண்க. காட்டாமைக்குக் காரணம் திருவிளையாட்டென மேற்கூறுதலும் காண்க.
தனிப் பெரும் தோழனார் - நம்பிகள் தோழனாராதலின் வேட்கைகாண என்க. விளையாட்டின் மேவி - விளையாட்டினை விரும்பி; மேவுதல் - விரும்புதல்.
வேட்கை காணுதலாவது - வேட்கை மிகுதியான் வரும் நிலையினையும் வெளிப்படும் சொற்களையும் கண்டும் கேட்கும் நுகர்தல்.
மறுத்ததே கொண்டு - மறுதலித்த அச்சொல்லையே முடிபாக எடுத்துக் கொண்டு.