பாடல் எண் :3501

தூதரைப் போக விட்டு வரவுபார்த் திருந்த தொண்டர்
"நாதரை யறிவி லாதே னன்னுதல் புலவி நீக்கிப்
போதரத் தொழுதே"
னென்று புலம்புவார் பரவை யாரைக்
காதலி னிசைவு கொண்டு வருவதே கருத்துட் கொள்வார்,
347

(இ-ள்) தூதரை.....தொண்டர் - தூதராக இறைவரைப் போகவிட்டபின் அவர் செய்கை முற்றி மீண்டு வருதலையே எதிர் நோக்கியிருந்த தொண்டராகிய நம்பிகள்; நாதரை...புலம்புவார் - எனது தலைவராகிய இறைவரை அறிவில்லாத நான் நன்னுதலாகிய பரவையினது புலவி தீர்த்து வரும்பொருட்டு வணங்கி வேண்டினேன் என்று புலம்பிடுவார்; பரவையாரை....கருட்துட் கொள்வார் - பரவையாரைக் காதல்பெருக இசைவித்துக்கொண்டே மீள்வார் என்றே கருத்தினுட் கொள்வாராகி,
(வி-ரை) பரவையாரை.....கருத்துட் கொள்வார் - பரவையாரை இசைவுபடுத்தியே இறைவர் மீள்குவர் என்று துணிந்தனராதலின் நாதரைத் தூது விடுத்த அதற்கு இரங்கிப் புலம்புவாராயினர்.
அறிவிலாதேன் - தகாத செயலாதலின் அறிவில்லேன் என்றார்; பின்னரும் "பிழையுடன் படுவாராகி" (3542) என்பது காண்க.
நன்னுதல் - பரவையார்பாற் கண்ட குணநலம் குறிப்பு; மேற்பாட்டிலும்"நன்னுதல்"(3502) என்பது காண்க.
தொழுதேன் - தொழுது வேண்டினேன். புலம்புவார் - பலவாறும் வருந்துவார்.
புலவிநீக்க - என்பதும் பாடம்.