போயவண் மனையி னண்ணும் புண்ணிய ரென்செய் தாரோ நாயனார் தம்மைக் கண்டா னன்னுதல் மறுக்கு மோதான் "ஆயவென் னயர்வு தன்னை யறிந்தெழுந் தருளி னார்தாஞ் சேயிழை துனிதீர்த் தன்றி மீள்வது செய்யா" ரென்று, | 348 | (இ-ள்) போயவள்.....என்செய்தாரோ - இங்கு நின்றும் சென்று அவளது மனையினைச் சேரும் புண்ணியராகிய இறைவனார் என்ன செய்தனரோ?; நாயனார்....மறுக்குமோதான் - இறைவரைக் கண்டால் நன்னுதலாகிய பரவைதான் மறுப்பாளோ?; ஆய என்....என்று - பொருந்திய எனது வருத்தத்தினை அறிந்து எழுந்தருளிய இறைவனார் அவளது சிறு கலகத்தினைத் தீர்த்தாலன்றி மீளமாட்டார் என்றுட்கொண்டு, (வி-ரை) இப்பாட்டுத், தூதின் முடிவுபற்றி நம்பிகள் மனத்துள் எண்ணிய ஐயங்களையும் அதற்குத்தாமே துணிவு பூண்ட நிலைகளையும் குறித்தது. போய் அவள் மனையில் நண்ணும் - இது போழ்தினுள் அவள் மனையில் இறைவர் சேர்ந்திருப்பர் என்று எண்ணிய குறிப்பு. என் செய்தாரோ? - ஐயம்; ஐயர் செயல் எவ்வாறு தொடங்கி எவ்வாறு முடிந்ததோ? என்றபடி. நாயனார்.....மறுக்குமோ தான் - ஐயத்தில் நீங்கி ஒருவழித் துணிதற்குரிய காரணம். தான் மறுக்குமோ - என்க; மறுக்கமாட்டாள் என்று வினா எதிர்மறை குறித்தது. ஆய - மூண்ட; ஆகிய; அறிந்து எழுந்தருளினார்தாம் - தாமே அறிந்து எழுந்தருளினாராதலின் என்று காரணக் குறிப்புப்பட நின்றது;அறிந்து சென்றாராதலின் துனிதீர்த்தன்றி மீளார் - என்ற முடிபுக்குரிய ஏது; துனி - சிறுகலாம், சிறுஊடல்; "துனியும் புலவியும்" (குறள்). தீர்த்தன்றி மீள்வது செய்யார் - எதிர்மறைகள் தீர்த்தே மீள்குவர் என உறுதி குறித்தன. மீள்வதும் - என்பதும் பாடம். |
|
|