பாடல் எண் :3503

வழியெதிர் கொள்ளத் செல்வர்; வரவுகா ணாது மீள்வர்
அழிவுற மயங்கி நிற்ப ரசைவுட னிருப்பர்; "நெற்றி
விழியவர் தாழ்த்தா" ரென்று மீளவு மெழுவர்; மாரன்
பொழிமலர் மாரி வீழ ஒதுங்குவர்; புன்க ணுற்றார்.
349

(இ-ள்) வெளிப்படை - தூதர் மீண்டு வரும் வழி நோக்கி எதிர்கொள்ளும்படி சிறிது தூரம் செல்வார்; அவர் வரக்காணாமையால் மீண்டு வருவார்; மணம் வருந்த மயங்கி நிற்பார்; சோர்வுடனே ஓர் புறம் இருப்பார்; நெற்றிக்கண்ணினையுடைய இறையவர் தாமதித்தார் என்று மீண்டும் எழுவார்; மதனன் பொழியும் மலரம்புகள் மழைபோல வந்து வீழ ஒதுங்குவார்; இவ்வாறு துன்பமுற்றனர். இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
இவை இறைவர் தூதுபோய் மீளுமளவும் உள்ள இடையில் கால நீட்டிப் பில் தரிக்கலாற்றாது நின்ற நம்பிகளின் மன அலைவும் மெய்ப்பாடுகளும் குறித்தன.
(வி-ரை) இப்பாட்டு முன் இரண்டு பாட்டுக்களில் கூறியவாறு நம்பிகள் மனத்தினுள் எண்ணமிட்டு இருக்கும் போழ்து, உடல் ஓரிடத்தில் அமைந்து இருக்கவும் தரிக்கவுமாற்றாது உழலும் மெய்ப்பாடுகளைக் குறித்தது. இம்மன நிலையினையும் இதன் மெய்ப்பாடுகளையும் பற்றிப் பரவையார் நிலையினை முன் (3469ல்) விரித்துரைத்தவாற்றாலும் கண்டுகொள்க. தன்மைநவிற்சியணி.
வழி எதிர் கொள்ளச் செல்வர் - முன் பாட்டில் முடித்தவாறு தூதர் பரவையாரின் துனி தீர்த்த நற் செய்தி கூறுவதை விரைவில் கேட்கும்பொருட்டு எதிர் செல்வார்என்பது.
அழிவுற - மன அழிந்து; வருந்தி நைந்து.
அசைவு - சோர்வு; நடுக்கம் என்றலுமாம்.
நிற்பர் இருப்பர் - மீளவும் எழுவர் - மனம் அழிந்து அலைதலின் உடலும் அவ்வாறே ஒருநிலையில் நிற்கலாற்றாது அலைதல் குறித்தது. நிற்கலாற்றாது, சிறிதுபோது இருப்பர்; இருக்கவுமாற்றாது சிறிது போதில் எழுவர் என்க.
தாழ்த்தார் - தாமதிக்கமாட்டார் என்றுரைப்பினுமமையும்.
மாரன்......ஒதுங்குவார் - மாரனது மலரம்புகள் நம்பிகள்பால் செயலற்று வீழ்ந்தன என்பது வீழ என்ற குறிப்பு. ஒதுங்குதல் - அவற்றின் இலக்கினுட்படாது விலகுதல்; புன்கண் - துன்பம்.