பாடல் எண் :3504

பரவையார் தம்பா னம்பி தூதராம் பாங்கிற் போன
அரவணி சடையார் மீண்டே யறியுமா றணையும் போதில்
இரவுதான் பகலாய்த் தோன்ற வெதிரெழுந் தணையை விட்ட
உரவுநீர்வெள்ளம் போல வோங்கிய களிப்பி
ற் சென்றார்.
350

(இ-ள்) பரவையார்....போதில் - பரவையாரிடத்தில் நம்பிகளின் தூதராகும் தன்மையிற் சென்ற அரவணிந்த சடையவராகிய இறைவனார் அங்கு நின்றும் மீண்டு தாமரந்தன்மை யறியும்படி உள்ள கோலத்துடனே வந்து அணைந்தபோது; இரவு.....தோன்ற - அந்தநடு இரவானது இருளின்றிப் பகல் போலப் பேரொளியுடன் விளங்கியிட; எதிர் எழுந்து - நம்பிகள் அவருக்கெதிரே எழுந்து; அணையை......போல - அணையை உடைத்தெழுந்து பரந்த நீர்ப்பெருக்கினைப் போல; ஓங்கிய.....சென்றார் - மிகுந்த களிப்பினுடனே எதிர்கொண்டு சென்றனர்.
(வி-ரை) நம்பி தூதராம் பாங்கு - நம்பிகளது தூதராகும் தன்மை; முறைமை; நிலைமை; ஆம் - ஆக்கச்சொல், அந்நிலையினராகத் தம்மை ஆக்கிக் கொண்டு தம்மை அருச்சிக்கும் முனிவர் கோலம் பூண்டு என்ற குறிப்புடையது.
அறியுமாறு - பரவையாரிடத்தில் அருச்சகர் கோலத்திற் சென்றது போலன்றி நம்பிகள்பால் தாமாந்தன்மை அறியும் கோலத்துடன்.
இரவுதான் பகலாய்த்தோன்ற - இருளடர்ந்த நடு இரவு பகல் போன்ற ஒளியுடன் தோன்ற; இஃது பேரொளியுடைய இறைவராகிய இரவியின் வருகையாலாகியது; இரவி வந்தபோது இரவு பகலாகும் இயல்பு குறித்தது; தோன்ற - தோற்றத்தின் அளவே யன்றி இரவு உண்மையிற் பகலாகவில்லை என்பது; இறைவரைக் கண்ட மாத்திரையில் நம்பிகளின் மனத்தின் எழுந்த உவகையால் முன் கொண்டிருந்த துன்பநிலை நீங்கி உவகை போந்தமையால் அந்த இரவே பகலாக விளங்கிற்று என்பதுமாம்.
அைணையை விட்ட உரவு நீர் வெள்ளம் போல - அணையினாற் றடுப்புண்டு தேங்கி நின்ற நீர்ப்பெருக்கு அணை உடைந்தபோது மிக்க வேகத்திற் செல்வது போல; "சிறைபெறா நீர்போல" (திருவா),உரவு - (நீர்ப்) பெருக்கு; "ஊரங்கணநீர் உரவு நீர் சேர்ந்தக்கால்" (நாலடி).
தூதராய்ப்பாங்கில் - அணையுமாறறியும் - என்பனவும் பாடங்கள்.