பாடல் எண் :3505

சென்றுதம் பிரானைத் தாழ்ந்து திருமுக முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட் டோரா" ருறுதிசெய் தணைந்தா" ரென்றே
"அன்றுநீ ராண்டு கொண்ட வதனுக்குத் தகவே செய்தீர்
இன்றவள் வெகுளி யெல்லாந் தீர்த்தெழுந் தருளி"
யென்றார்.
351

(இ-ள்) சென்று....தாழ்ந்து - போய்த் தமது பெருமானாரை வணங்கி; திருமுகம் முறுவல் செய்ய - அவரது திருமுகமானது சிறுநகை காட்டக் கண்டு; ஒன்றிய....என்றே - பொருந்திய திருவிளையாட்டினை உணராதவராகிப் புலவியை நீக்கி இசைவு செய்து வந்தனர் என்றே எண்ணி; அன்று....என்றார் - தேவரீர் அன்று என்னை ஆளாகக் கொண்டருளிய அச்செயலுக்கு ஏற்ற தன்மையாகவே இன்றும்அருள் செய்தீர், இவளுடைய புலவியை எல்லாம் தீர்த்து எழுந்தருளிய அதனாலே என்று சொன்னார்.
(வி-ரை) திருமுகம் முறுவல் செய்ய - தம்பெருமானது திருமுகம் தம்மை நோக்கிச் சிறுநகை செய்ய அது கண்டு; செய்ய - செய்யக் கண்டு; அங்குப் பரவை யார் மறுத்தது கேட்டு அவர் அறியாமை கண்டு "நகையுட் கொண்டது" (3500) போலவே, ஈண்டு நம்பிகள்பாலும் அவரது, "வெம்புறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி" (3500) முறுவல்செய்தருளினர்.
ஒன்றிய விளையாட்டு - ஒன்றிய அச் சிறுநகையினுட் பொருந்திய; இறைவர் மேற்கொண்ட என்றலுமாம்; "திருவிளையாட்டு" (3500).
உறுதிசெய்து - இசைவுபடுத்தி; "யாம் உனக்கோர் தூதனாகிப்-பரவைபாற் போகின்றோம்" (3483) என்று மேற்கொண்டு சென்ற காரியத்தை நிறைவேற்றி; ஆனால் முன்னர் இறைவர் பரலைபால் தூதனாகிப் போகின்றோம் என்றருளினாரேயன்றிப் புலவி நீக்கி முடிக்கின்றோம் என்றாரிலர்; மேல், அதுபோலன்றி, "இன்னம் அவள்பாற் போய்....இப்போதே நீ குறுகுமா கூறுகின்றோம்" (3510) என்று உறுதி கூறுவதும் காண்க.
ஆண்டு கொண்ட அதனுக்குத் தகவே செய்தீர் - ஆட்கொண்ட நன்மை போலவே உறுதி செய்த அருளும் செய்தீர் என்றபடி; அதனுக்குத்தகவே - அதற்கொத்தபடியே;அன்று ஆண்டு கொண்ட - என்றது திருவெண்ணெய் நல்லூரில் தடுத்தாட் கொண்ட அருட் செயலைக் குறித்தது; அன்று வலிந்து திருவிளையாட்டால் அருளியது போலவே இன்றும் வலிந்து அருள நின்றீர் என்று இந்நிகழ்ச்சியின் உண்மைக் குறிப்புத் தருவதும் காண்க.
இன்று....எழுந்தருளி - நம்பிகள் தாமே தம்மனத்துட்செய்து கொண்ட முடிபு; 3502 - பார்க்க.
எழுந்தருளி - எழுந்தருளிய அதனாலே; எழுந்தருளி - தகவே செய்தீர் - என்று கூட்டுக.