அம்மொழி விளம்பு நம்பிக் கையர்தா மருளிச் செய்வார் "நம்மைநீ சொல்ல நாம்போய்ப் பரவைதன் னில்ல நண்ணிக் கொம்மைவெம் முலையி னாட்குன் றிறமெலாங் கூறக் கொள்ளாள் வெம்மைதான் சொல்லி நாமே வேண்டவு மறுத்தா" ளென்றார். | 352 | (இ-ள்) அம்மொழி...அருளிச் செய்வார் - அந்த மாற்றத்தினை விளம்பும் நம்பிகளுக்கு இறைவனார் தாம் அருளிச் செய்வாராய்; நம்மை நீ....கூற - நம்மிடம் நீ வேண்டிக் கொண்டபடியே நாம் சென்று பரவையினுடைய இல்லத்தினைச் சேர்ந்து பணைத் தெழுந்த விருப்பம் தருகின்ற தனங்களையுடைய அவளுக்கு உனது திறங்களை எல்லாம் எடுத்துச் சொல்லவும், கொள்ளால் - ஏற்றுக் கொள்ளாதவளாகி; வெம்மை தான் சொல்லி - விரும்பும் மொழிகளையே சொல்லி; நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார் - நாமே வேண்டிக் கொள்ளவும் கேளாது மறுத்து விட்டாள் என்று அருளிச் செய்தார். (வி-ரை) அம்மொழி - முன்பாட்டிற் கூறியபடி இறைவரது திருவிளையாட்டினை உணராது நம்பிகள் கூறிய நன்றிமொழி. தம்மை - நம்பால்; உருபு மயக்கம்; சொல்ல - சொன்னபடி; சொன்னதனாலே. கொம்மை - பணைத்த; திரண்ட; வெம்மை - விருப்பம் விளைக்கின்ற சொற்கள். கொள்ளாள் - ஏற்றுக் கொள்ளாதவளாகி; முற்றெச்சம்; கொள்ளாள் - சொல்லி - மறுத்தாள் என்று முடிக்க.வெம்மைதான் சொல்லி நாமே வேண்டவும் - வெம்மை - விருப்பம் என்று கொண்டு, அவள் விரும்பத் தக்கனவாகிய இதமாகிய நல்ல வார்த்தைகளை எடுத்துச் சொல்லி நாமே வேண்டவும் என்று கூட்டியுரைக்க. வெம்மைதான் சொல்லி மறுத்தாள் - கடிய மொழிகள் கூறி மறுத்தனள் என்று கூட்டியுரைக்கவும் நின்றது; முன் "கரும மீதாக நீரிக் கடைத்தலை வருகை மற்றும் பெருமைக்குத் தகுவ தன்றால்....நீரும்போம்" (3499) என்றது. தான் - வெம்மை தானேயன்றி வேறில்லை. நாமே வேண்டவும் - ஏகாரம் உயர்வு குறித்த பிரிநிலை; வேண்டவும் - உம்மை உயர்வு சிறப்பு; வேண்டிய தன்மை; "நுன்னையான் வேண்டிக் கொண்டதாதலின் மறுத்தல் செய்ய வடாது" (3498) என்று முன் கூறியது. திறமெலாம் கூற - "நம்பி செய்த ஏதங்கள் மனத்துக் கொள்ளா தெய்திய வெகுளி நீங்கி, நோதக வொழித்தற்கு" (3498) என்றது. |
|
|