அண்ணலா ரருளிச் செய்யக் கேட்டவா ரூரர் தாமுந் துண்ணென நடுக்க முற்றே தொழுது"நீ ரருளிச் செய்த வண்ணமு மடியா ளான பரவையே மறுப்பாள்? நாங்கள் எண்ணலா ரடிமைக் கென்ப தின்றறி வித்தீ" ரென்று, | 353 | (இ-ள்) அண்ணலார்......தொழுது - முன்கூறியவாறு இறைவனார் அருளிச் செய்ததனைக் கேட்ட நம்பியாரூரரும் துண்ணென்று நடுக்கமுற்று அவரை வணங்கி; நீர்.....மறுப்பாள் - தேவரீர் அருளிச் செய்த தன்மையினையும் உமது அடியாளாகிய பரவையே மறுக்கவல்லவள்?; நாங்கள்....என்று - நாங்கள் அடிமைத் திறத்தின் வைத்து எண்ணுதற்கு உரியரல்லோம் என்பதனை இன்று அறியச் செய்தீர் என்று கூறி, (வி-ரை) துண்ணென நடுக்க மெய்தி - உறுதி செய்தணைந்தாரென்றே கொண்டு எய்திய முன்கூறிய மகிழ்ச்சியெல்லாம் உடனே மாறி அதிவிரைவில் மெய்ந் நடுக்கமுற்று. நீர்......மறுப்பாள் - தலைவராகிய நீர் சொன்ன கட்டளையை அடியாளாகிய பரவையோ மறுக்க வல்லவள்? ஏகார வினா வல்லளல்லள் என்று எதிர் மறைகுறித்தது; வண்ணமும் - வண்ணத்தினையும்; "வண்ணமும் வடிவும்" (திருஞா. தேவா); வண்ணம் - கட்டளை; பொருள்; உம்மை உயர்வு சிறப்பு. நாங்கள்....என்பது - எண்ணலார் - எண்ணப்படாதவர்; எண்ணத்தில் வரத்தகாதவர்; அடிமைக்கு - அடிமைக்காக; அடிமையின் பொருட்டு; நாங்கள் - பரவையாரையும் உளப்படுத்திய பன்மை; பரவையாரை உளப்படுத்திய தென்னை? எனின், "என்னைத் தன்னடி யானென் றறிதலுந், தன்னை நானும் பிரானென்றறிந்தெனே" (குறுந்) என்றவாறு, பரவையார் மறுத்தற்குக் காரணம் பிரானென் றறியாமை என்பார் "எண்ணலார் அடிமைக்கு" என்றார்; அவளை அடிமை என்று எண்ணாமையால் இசைவித்தல் செய்யாமையாலும், தமது கருத்து முற்றுவித்தல் செய்யாமையின் தம்மையும் அடியானென்றறியாமை புலப்படுதலானும் நாங்கள் அடிமைக்கு எண்ணலார் என்று உளப்படுத்திக் கூறினார்; புலவி நீக்கிச் சேர்த்தல் இருபாலும் சாரும் செயலாதலின் "நாங்கள்" என்றார் என்றலுமாம். புலவியினால் பிரியினும் அன்பாற் பிரியாமையின் உளப்படுத்தியவாறுமாம். என்பது - என்பதனை; இரண்டனுருபு தொக்கது. இன்று அறிவித்தீர் - இதுவரையும் நாங்கள் அடியோம் என்றெண்ணியிருந்தது தவறு என்பதனை இன்று அறியும்படி செய்தீர்; அன்புரிமை காரணமாகத் தலைவரிடம் பிணங்கிக் கூறும் மொழி; மேல் வரும் பாட்டில் "யான் மிகை உமக்கின்றானால்" (3508) என்றதும், அதன்மேல் "இன்று என் அடிமை நீர்வேண்டாவிட்டால்" (3509) என்றதும் இக்கருத்து. என்று - என்றார் என வரும்பாட்டுடன் முடிக்க. எண்ண ஆர் அடிமைக்கு என்பது பாடமாயின் அடிமையாக எண்ணுதற்கு நான் ஆர்? - என்ன பொருத்தமுடையேன்? - என்க; "யானா ரென்னுடை யடிமை தானியாதே" (திருவிசைப்பா). |
|
|