வானவ ருய்ய வேண்டி மறிகட னஞ்சை யுண்டீர் தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்தாட் கொண்டீர் நான்மறைச் சிறுவர்க் காகக் காலனைக் காய்ந்து நட்டீர் யான்மிகை யுமக்கின் றானா லென்செய்வீர் போதா? தென்றார். | 354 | (இ-ள்) வானவர்.....உண்டீர் - தேவர்கள் உய்யும் பொருட்டு அலைகடலில் எழுந்த பெருவிடத்தினை உண்டீர்; தானவர்....ஆட்கொண்டீர் - அசுரர்களது முப்புரங்களும் எரிந்து போக அவற்றுள் இருந்த அடியவர்களான மூவர்களை மட்டும் வேவாது தவிர்த்து ஆட்கொண்டீர்; நான்மறை...நட்டீர் - நான்மறை வல்ல சிறுவராகிய மார்க்கண்டேயரைக் காக்கும் பொருட்டுக் கூற்றுவனை உதைத்து (அவ்வந்தணனை) அடிமை கொண்டீர்; யான்மிசை......என்றார் - இத்தன்மையுடைய பெருங்கருணையாளராகிய உமக்கு நான் இன்று மிகையானால் மீண்டு வாராது வேறென் செய்வீர்? என்றார். இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. (வி-ரை) நஞ்சையுண்டீர் ஆட்கொண்டீர் - காய்ந்து நட்டீர் - என்ற மூன்றுதாரணங்களும் இறைவரது கருணைப் பெருக்கினை விளக்கி அவர் அடியாரைக் காக்கும் தன்மையை எடுத்துக்காட்டின; இத்தன்மையுடைய நீர்என்னைக் காவா தொழியின் உமக்கு யான் மிகை என்றதே உமது துணிபு என்று கூறி நொந்துகொண்டவாறு. சிலரேயாயினும் பலரேயாயினும் செய்யும் கருணைப்பெருக் குடையீர். மூவர் - திரிபுரங்களில் இருந்த அடியார்களான மூன்று அசுரர்கள்; பரமவிரதன், பரமயோகன், பரமகுணன் என்பவர்; வேறு பெயர்களு முரைப்பர். தவிர்த்து - வேவாமல் தடுத்து; "மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்" (தேவா - நம்பி); "மூவார் புரங்க ளெரித்த வன்று மூவர்க் கருள்செய்தார்" (ஞான. தேவா). நான் மறைச்சிறுவர் - மார்க்கண்டேயர்,. காய்ந்து நட்டீர் - காய்ந்து கருணை செய்தீர். மிகை - வேண்டத் தகாதவன்; வெறுத்துத் தள்ளப்பட்டவன். போதாது என் செய்வீர் - வாளா திரும்பி வராமல் வேறு என்ன செய்வீர்; போதாது - திரும்பிவராது; இன்று உமக்கு நான்மிகையானால் என்க; இன்று - முன்வலிந்தும் ஆட்கொள்ளவேண்டி நின்ற யானே இன்று உமக்கு மிகையானேன் என்ற குறிப்பு; மேல் "அன்று வலிய ஆட்கொண்ட பற்றென்?" (3509) என்பதும் காண்க. மூவரைத் தடுத்தாட் கொண்டீர் - என்பதும் பாடம், |
|
|