"ஆவதே செய்தீ ரின்றென் னடிமைநீர் வேண்டா விட்டால் பாவியேன் றன்னை யன்று வலியவாட் கொண்ட பற்றென்? நோவுமென் னழிவுங் கண்டீர் நுடங்கிடை யவள்பா லின்று மேவுதல் செய்யீ ராகில் விடுமுயி" ரென்று வீழ்ந்தார். | 355 | (இ-ள்) ஆவதே செய்தீர் - தகுதியாவதே செய்தீர்; இன்று....பற்று என்? - இன்று எனது அடிமையைத் தேவரீர் விரும்பாவிட்டால் அடிமைக்கு எண்ணவாராத பாவியேனாகிய என்னை அன்று நான் மறுப்பவும் திருவெண்ணெய் நல்லூரில் வைத்து வலிய ஆளாக்கொண்ட பற்று எதற்காக; நோவும்....கண்டீர் - எனது வருத்தத்தினையும் மனம் நைதலையும் கண்டுள்ளீர்; நுடங்கு.....உயிர் என்று - துவளும் இடையினையுடைய பரவையிடத்தில் இன்றே நான் சென்று சேரும்படி செய்யீராகில் உயிர் விடும் என்று சொல்லி; வீழ்ந்தார் - திருவடியில் வீழ்ந்தனர். (வி-ரை) ஆவதே செய்தீர் - வருத்தமிகுதியால் எதிர்மறைப் பொருட்குறிப்புடன் வந்த இகழ்ச்சிக் குறிப்பு வழக்கு. இன்று வேண்டா விட்டால் - அன்று வலிய ஆட்கொண்ட பற்று என்?- அன்று வலிந்து ஈர்த்து ஆட்கொண்ட நீர் இன்று ஆளாக எண்ணாது கைவிடுதல் நீதியன்று என்பது; நீதியன்று என்பது குறிப்பெச்சம். நோவும்என் அறிவும் - நோ - வருத்தம்; அழிவு - அது காரணமாக வருவது;கண்டீர் - கண்கூடாக நேரில் அறிந்துள்ளீர். மேவுதல் செய்யீராகில் - மேவுதல் - நான் மேவும்படி; மேவுவித்தலை; செய்தல் - நிலையினை உளதாக்குதல்; இன்று - இன்றே; ஏகாரம் தொக்கது. உயிர்விடும் - என்க; முன்பின்னாக வந்தது விரைவுக் குறிப்பு; விடுப்பேன் என்னாது விடும் - என்றது எனது முயற்சியின்றி உயிர் தானே நீங்கிவிடும் என்றதாம். வீழ்ந்தார் - நிற்கலாற்றாது தளர்ந்து அவரது திருவடியில் வீழ்ந்தனர். வரும் பாட்டைப் பார்க்க. என்றன் அடிமை - இன்னம் மேவுதல் - என்பனவும் பாடங்கள். |
|
|