பாடல் எண் :3510

தம்பிரா னதனைக் கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை யருளா னோக்கி,"நாமின்ன மவள்பாற் போயக்
கொம்பினை யிப்போ தேநீ குறுகுமா கூறு கின்றோம்
வெம்புறு துயர்நீங்" சென்றார் வினையெலாம் விளைக்க வல்லார்.
356

(இ-ள்) தம்பிரான்....நோக்கி - தம்பிரானார் அதனைக் கண்டு அவ்வாறு தரிக்கலாற்றாது தளர்ச்சியினால் தம் அடிக்கீழ் வீழ்ந்த நம்பிகளை அருளாலே நோக்கி; "நாம்....நீங்கு" என்றார் - நாம் மீண்டும் ஒருமுறை அவளிடம் தூதுபோய் அந்தக் கொம்பு போன்ற பரவையை நீ இப்போதே சென்று அடையும்படி சொல்கின்றோம்; உன்னை வருத்துகின்ற துன்பத்தினை நீங்குவாயாக! என்றருளினர்; வினையெலாம் விளைக்க வல்லார் - விளைப்பயன்களை யெல்லாம் அவ்வவ்வுயிர்கள் பாற் கூட்டுவிக்க வல்ல எம்பெருமானார்.
(வி-ரை) தரியாது....நம்பி - முன்பாட்டில் "வீழ்ந்தார்" என்றதனை விளக்கியவாறு.
அருளால் நோக்கி - அருட்பார்வை செய்து; அஃது இடர்நீக்கி உய்விக்கும் பார்வை.
இன்னம் - மேலும் ஒருமுறை; குறுகுமா - குறுகும்படி; ஆறு என்பது ஈறுதொக்கு என நின்றது.
வெம்புறு துயர் - உள் வெதும்புதலினால் உளதாகும் துன்பம்.
வினை எலாம் விளைக்க வல்லார் - முன்னர் "வெம்புறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி" (3500) என்றதனுள் விளையாட்டாவது அவ்வவரும் தத்தம் வினைப்பயன்களை அவ்வவரே துய்க்கும்படி செய்து பார்த்திருத்தல்; அரனது விளையாட்டாவது வினையை விளைவித்தலே - அனுபவிக்கச் செய்து பார்த்திருத்தலே - யாம் என்பது. "வல்லார்கள் வல்ல வகையாற் றொழில்புரித, லெல்லா முடனே யொருங்கிசைந்து - செல்காலை; முட்டாமற் செய்வினைக்கு முற்செய்வினைக்குஞ் செலவு, பட்டோலை தீட்டும் படிபோற்றி....அல்ல லுறுத்து மருஈரகங் கண்டுநிற்க, வல்ல கருணை மறம்போற்றி - பல்லுயிர்க்கும்; இன்ன வகையாலிருவினைக ணின்றருத்தி, முன்னைமுத லென்ன முதலில்லோ-னல்வினைக்கண்; எல்லா வுலகு மெடுப்புண் டெடுப்புண்டு, செல்காலம் பின்னரகஞ் சோரமே, - நல்லநெறி, யெய்துவதோர் காலந்தன் னன்பரைக்கண் டின்புறுதல், உய்வுநெறி சிறிதே யுண்டாக்கி...." (போற்றிப்பஃறொடை) என்றற் றொடக்கத்த திருவாக்குக்கள் காண்க. இறைவர் வினையெலாம் விளைக்கும் தன்மைபற்றி மேலும் மெய்கண்ட ஞானநூல்களுட் கண்டுகொள்க.
வினை வல்லார் - முன்முறை செயல் முற்றுப்பெறாமையின் காரணக் குறிப்பு.
கூடுமா கூறுகின்றோம் - என்பதும் பாடம்.