மயங்கிய நண்ப ருய்ய வாக்கெனு மதுர வாய்மை நயங்கிள ரமுத நல்க நாவலூர் மன்னர் தாமும் "உயங்கிய கலக்க நீக்கி யும்மடித் தொழும்ப னேனைப் பயங்கெடுத் திவ்வா றன்றோ பணிகொள்வ"தென்றுபோற்ற, | 357 | (இ-ள்) மயங்கிய...நல்க - தெளிவுறாது மயக்கமுற்ற நண்பராகிய நம்பிகள் உய்யும் பொருட்டுத் தமது திருவாக்காகிய இனிமையும் உண்மையும் இன்பமும் பொருந்திய அமுதத்தினை இவ்வாறு அருளியிட; நாவலூர் மன்னர் தாமும் - திருநாவலூரர் பெருமானாகிய நம்பிகளும்; உயங்கிய....என்ற போற்ற - வருத்தம் விளைத்த கலக்கத்தினை நீக்கி உமது திருவடித் தொண்டனாகிய என்னை அச்சம் கெடுத்து இப்படி யன்றோ தொண்டு கொள்வது! என்று துதிக்க, (வி-ரை) மயங்குதல் - சித்தம் துணிவு பெறாமை; கலக்கம். அமுதம் - தரியாது தளர்ந்து வீழ்ந்த சோர்வு தீர்ந்து உய்ய வருதலின் அமுதம் என்றார். வாய்மை - மெய்த் திருவாக்கெனு மமுதம்; முன்னர்க் (3483) கூறியதும் வாய்மையே;" உனக்கோர் தூதனாகி யிப்பொழுதே....பரவைபாற் போகின்றோம்" (3483) என்று தூதனாய்ச் செல்கின்ற அளவே அங்குக் கூறினாராதலின்; இங்கு "இப்போதே நீ குறுகுமா கூறுகின்றோம்" என்ற நிலையினுடன் ஒத்துப் பார்க்க; இக்கருத்தேபற்றி ஈண்டு வாய்மை நலங்கிள ரமுதம் என்றார்; "போதியோ வென்னு மன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதம்" (2986); முன்னே கூறியது திருவிளையாட்டின் பொருட்டாதலின், இங்கே இம்முறை "வாய்மை" என்றார் என்று ஈண்டு முன் கூறியது வாய்மை யன்று என்னும் குறிப்புப்பட விசேடவுரை காண்பாருமுண்டு; முன்காட்டியவாற்றால் அது பொருளன்மை கண்டு கொள்க. உயங்கிய - வாடிய; உயங்குதல் - வாடுதல். அடித் தொழும்பனேனைப் பயங்கெடுத்துப் பணி கொள்வது - "சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்" என்றபடி தொண்டரைக் காப்பது தலைவர் கடன் என்பது குறிப்பு. இவ்வாறன்றே பணிகொள்வது - தம் கருத்து நிறைவேறிற் றென்று நம்பிகள் துதித்த வகை. |
|
|