அன்பர்மேற் கருணை கூர வாண்டவர் மீண்டுஞ் செல்லப் பின்புசென் றிறைஞ்சி நம்பி பேதுற லோடு மீண்டார்; முன்புடன் போதா தாரு முறைமையிற் சேவித் தேகப் பொன்புரி சடையார்மாதர் புனிதமா ளிகையிற் சென்றார். | 358 | (இ-ள்) அன்பர்....செல்ல - அன்பர்பாற் கருணை பெருக இறைவனார் இவ்வாறு மீளவும் செல்வாராக; பின்பு சென்று....மீண்டார் - அவர் பின்னே சிறிது தூரம் சென்று வணங்கி நம்பிகள் மயக்கத்தோடு மீண்டனர்; முன்பு....ஏக - முன் முறையிலே உடன் செல்லாதவர்களும் முறைமைப்படி சேவித்துப் பின்செல்ல; பொன்புரி....சென்றார் - பொன்போன்று ஒளிவிளங்குகின்ற புரித்த சடையினையுடைய இறைவரும் பரவையாரது தூய திருமாளிகையிற் சென்றருளினர். (வி-ரை) கருணைகூரச் செல்ல - என்க. கூர - கூர்தலினால். பின்பு சென்று இறைஞ்சி - வழிச்செல விடுப்பாரைச் சிறிது தூரம் (7 அடி அளவு என்ப) பின் சென்று வழி விடுவித்து விடைகொள்ளும் மரபு குறித்தது. பேதுறவோடும் - மயக்கத்துடனே; பேதுறவு - இன்னதென்று துணியமாட்டாத துன்பநிலை. முன்புடன் போதாதாரும் - முன்னர், "வேண்டுவார் போத, ஒழிந்தார் புறத்தொழிய" (3486) என்றபடி முன்பு உடன் தொடர்ந்து செல்வதாகும். முறைமையில் சேவித்து - முறைமையாவது அவ்வவர்க்கேற்ற நிலை. அருச்சகர் கோலங்கொண்டு சென்ற முன்போலன்றி, ஈண்டு இறைவர் "தாமாந்தன்மை அறிவுறு கோலத்தோடு" (3515) செல்கின்றாராதலின் அம்முறைமைக் கேற்றவாறு என்றலுமாம்; இவர்களை மேற் குறிப்பது (3515 -3516) காண்க. புனித மாளிகை - ஒருமுறைக் கிருமுறை இறைவர் எழுந்தருளும் பேறு பெறுதலின்புனிதம் என்றார். இதனையே "வெள்ளித் திருமலை" (3516) என்பது காண்க. முன்னர்த் தொடக்கத்தில் "அவதாரஞ்செய் மாளிகை" (90) என்றார். மாளிகையிற் சென்றார் - முன்பு சென்ற செலவினை எட்டுத் திருப்பாட்டுக்களாற் (3485-3492) கூறிய ஆசிரியர், ஈண்டு இவ்வொருபாட்டின் ஒரு பகுதியில் முடித்தருளினர், நம்பிகளுக்கருளும் விரைவு குறித்தற்கு. |
|
|