பாடல் எண் :3513

மதிநுதற் பரவை யார்தா மறையவர் போன பின்பு
முதுமறை முனியாய் வந்தா ரருளளுடை முதல்வ ராகும்
அதிசயம் பலவுந் தோன்ற
வறிவுற்றே யஞ்சிக் "கெட்டேன்!;
எதிர்மொழி யெம்பி ரான்மு னென்செய மறுத்தே!" னென்பார்.
359

(இ-ள்) மதிநுதல்....பின்பு - மதிபோன்ற நெற்றியினை உடைய பரவையார் மறையவராய் வந்தவர் சென்ற பின்னர்; முதுமறை....அறிவுற்றே - முதிய மறைமுனிவர் கோலத்துடன் வந்த அவர் அருளுடைய இறைவரேயாம் என்ற நிலை தோற்றும் அதிசயம் பலவும் தோன்ற அறிந்து; அஞ்சி....என்பார் - அச்சங்கொண்டு "கெட்டேன்! எமது பெருமான் திருமுன்பு எதிராக மொழி தந்து என்ன செய்ய மறுத்தொழிந்தேன்" என்று வருந்துவாராய்,
(வி-ரை) மதிநுதல் - மதியுடைய நுதல் என்று கொண்டு மதியுடை மையினாலே தோன்ற என்னும் குறிப்பும் தரநின்றது. "மதியினாலே சென்னியிளம் பிறையணிவார் கோயில் வாயிற் றிசைநோக்கிக் கைதொழுதாள்" (2373); முன்னர்ப் "பரமராவ தறியாதே பாதி மதிவா ணுதலாரும்" (3493) என்றதனை இதனுடன் ஒப்பிட்டுக் கவிநயங் கண்டுகொள்க.
அருருறை முனியாய் வந்தார் - அர்ச்சகராகிய கோலத்துடன் வந்தவர்; "பண்டேதம்மை யர்ச்சிக்கும் சீலமுடைய மறைமுனிவராகி" (3491); "முப்போது மருச்சிப்பார் முதற்சைவ ராமுனிவர்" (முப்-தீண்-புரா-1);ஆய் - ஆக்கச் சொல் அக்கோலந் தாங்கி என்ற பொருள் தந்து நின்றது.
ஆளுடைய முதல்வராகும் அதிசயம் - ஆகும் - என்று காணுதற் கேதுவாகிய என்ற பொருள் தந்தது. அதிசயம் பல - அவரது கோலமும், ஒழுக்கமும், வந்த நேரமும், பேசிய சொல்நிலையும், ஒளியும் முதலியவை; புட்ப வருஷம் பொழிதல் முதலியவை என்றுரைப்பாரு முண்டு; அது பொருளன்றென்க; இவ்வாறு இறைவர் தம்மை யறியக் காட்டாது வெளிப்படும் போதெல்லாம் அவ்வக் கோலங்கள் மறைந்த பின்னரே அறிய வைக்கும் சரிதங்களை ஈண்டு நினைவு கூர்க. "காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" (தேவா); அருளுடை - வந்ததன் காரணம் கூறியபடி.
கெட்டேன் - தமது பெருந்தவறு கண்டபோது வருத்த மிகுதிக்கண் வருவ தோரிடைச்சொல்.
என் செய மறுத்தேன்? - ஏன் மறுத்தேன்; இறைவர் அருளிய மொழியைக் கேட்டு அதன்படி ஒழுகலன்றி வேறு என்ன செயல்தான் எனக்குண்டு என்பது.
என்பார் - என்று பார்த்து - அழியும் போதில் - என வரும்பாட்டுடன் முடிக்க. என்பார் - என்பாராகி; முற்றெச்சம்.
முதிர்மறை - ஆளுடைய முதல்வர் -என்பனவும் பாடங்கள்.