கண்டுயி லெய்தார் வெய்ய கையற வெய்தி "யீங்கின் றண்டர்தம் பிரானார் தோழர்க் காகவர்ச் சிப்பார் கோலங் கொண்டணைந் தவரை யானுட் கொண்டிலேன் பாவியே" னென் றொண்சுடர் வாயி லேபார்த் துழையரோ டழியும்போதில், | 360 | (இ-ள்) கண்....எய்தி - கண்ணுறக்கம் கொள்ளாதவராகி வெவ்விய செயலிழந்த வருத்தம் கொண்டு; ஈங்கு...பாவியேன் என்று - இங்கு இன்று தேவர்கள் பெருமனார் தாமே தமது தோழராகிய நம்பிக்காக அருச்சகர் கோலந்தாங்கி வந்தணைந்தவரை நான் இன்னாரென்று தெளியாதேன் பாவியானேன் என்று இரங்கி; ஒண்....போதில் - ஒள்ளிய விளக்கமுடைய வாயிலினை நோக்கியவாறே பாங்கிமாருடனே மனமழிந்து வருந்தும் போதில்; (வி-ரை) கையறவு - செயலிழந்த நிலையின் வரும் துன்பம். ஈங்கு - உட்கொண்டிலேன் பாவியேன் -முன் பாட்டில் வந்தவர் முதல்வராகும் தன்மை அதிசயங்களால் அறிவுற்று அஞ்சிய நிலை கூறினார். இப்பாட்டால் அவர் அவ்வாறு வருதற்குரிய ஏதுவினை மேலும் கருதி யுணர்ந்தமை கூறினார். பிரானார் - அணைந்தவரை - பிரானார் அணைந்தார்; அவரை என்க; உட்கொள்ளுதல் - மனத்துள் ஆய்ந்துணர்ந்து அதற்குத் தக ஒழுகுதல் என்ற பொருளில் வந்தது. பாவியேன் - பாவியேனாதலின் என்று தம்மைத் தாமே நொந்துகொண்டு வருந்தியது; பாவித்திலேன் என்றுரைத்தலுமாம். சுடர் வாயிலே பார்த்து - இறைவரைப் புலவி மிகுதியினாலே "நீரும் போம்" என்று மறுத்துப் போக்கியபின் மன அமைதியின்றிய கலக்கத்தால் வாயிலைச் செறிய அடைத்தலின்றி யிருந்தனராதலின் அதனைப் பார்த்து என்க. இவ்வாயில் வழியே முன் வந்தனர்; இன்னும் வருவரே என்ற மனங்கலங்கிய நிலையினால் வாயிலே பார்த்தழிந்தனர்; இது (உயர்ந்த) தன்மை நவிற்சியணி. வாயில் - தூது என்றலுமாம். உழையர் - பக்கத்திலிருப்போர்; தோழியர்கள். அவர்களோடு அழிதலாவது அவர்களும் தமது தலைவியாரது நோயிற்கலந்து அனுபவித்தனர்என்பது. இன்றிங் கண்டர் - என்பதும் பாடம், |
|
|