வெறியுறு கொன்றை வேணி விமலருந் தாமாந் தன்மை அறிவுறு கோலத் தோடு மளவில்பல் பூத நாதர் செறிவுறு தேவர் யோகர் முனிவர்கள் சூழ்ந்து செல்ல மறுவில்சீர்ப் பரவை யார்தம் மாளிகை புகுந்தார் வந்து. | 361 | (இ-ள்) வெறி....விமலரும் - மணம்மிக்க கொன்றையைச் சூடிய சடையினை உடைய இறைவரும்; தாமாந் தன்மை அறிவுறு கோலத்தோடும் - இறைவர் என்று கண்டார் அறியும்படி வெளிக்காணும் திருக்கோலத்துடனே; அளவில்....செல்ல - அளவற்ற பல பூதகண நாதர்களும் நெருங்கிய தேவர்களும் யோகர்களும் முனிவர்களும் தம்மைச் சூழ்ந்து செல்ல; மறுவில்....வந்து - குற்றமற்ற சிறப்பினையுடைய பரவையாரது திருமாளிகையின்கண் வந்து புகுந்தருளினர். (வி-ரை) தாமாந்தன்மை அறிவுறு கோலம் - முன் தம்மைக் கண்டோர் அறிவுறாதபடி அருச்சகர் கோலம் கொண்டணைந்தது போலன்றி, இப்போது இறைவர்தாம் என்று அறியும்படியுள்ள கோலம். அவை, பேரொளி, சடைமுடி முதலிய தமது அடையாளங்கள், பூதநாதர் முதலியோர் சூழ்தல் முதலாயின. பூதநாதர் - சிவபூத கணநாதர்கள்; யோகர் - யோகத்தாற் சிவனை விடாது உட்கொண்டோர். வந்து மாளிகை புகுந்தார் - என்க; வினைமுற்று முன் வந்தது விரைவுக் குறிப்பு; வந்து (நேரே) மாளிகை புகுந்தார் - என்றமையால் வாயில் அடைப்பின்றி நின்றமை குறிக்கப்பட்டது. "மணிவாயிற் கதவஞ் செறிய வடைத்த வதன்முன்பு நின்று பாவாய் திறவாயென்றழைப்ப"(3492) என முன்னர்க் கூறியது கருதுக. செறிவுறு தேவர் - அனேகராதலின் செறிவுறு என்றார்; செறிதல் - நெருங்குதல். மறுவில் சீர் - உத்தம குணங்களின் வழுவின்மையும்,அதனாலாய சிறப்பும், முன்னர் அறியாது "நீரும் போம்" "உமது பெருமைக்குத் தகுதியன்று" என்றவாறெல்லாம் கடிந்து மறத்தவை அவர்பாற் குற்றமாகாமையும், அதனாலே இறைவர் மீளவும் எழுந்தருளக் காரணமாயின சிறப்பும் குறிப்பாலுணர்த்தியவாறு. பரவையார் தம் மாளிகை - பரவையார் திருமாளிகையே தமது மாளிகையாக் கொண்டார் என்பது தம் என்றதன் குறிப்பு. இதனால் வரும் பாட்டிற்குத் தோற்றுவாய் செய்தவாறும் காண்க. |
|
|