பாடல் எண் :3516

பாரிடத் தலைவர் முன்னாம் பல்கண நாதர் தேவர்
நேர்வுறு முனிவர் சித்த ரியக்கர்க ணிறைத லாலே
பேரரு ளாள ரெய்தப் பெற்றமா ளிகைதான் றென்பாற்
சீர்வளர் கயிலை வெள்ளித் திருமலை போன்ற தன்றே.
352

(இ-ள்) பாரிடத்தலைவர்....நிறைதலாலே - பூத கணநாதர்கள் முதலாகப் பல வகைப்பட்ட கணநாதர்களும் தேவர்களும் நேர்மை பொருந்திய முனிவர்களும் சித்தர்களும் இயக்கர்களும் நிறைந்தமையாலே; பேரருளாளர்....மாளிகைதான் - பெருங்கருணையாளராகிய சிவபெருமான் எழுந்தருளி வரும் பேறுபெற்ற அத்திருமாளிகை தானே; தென்பால்....அன்றே - தென்றிசையிலே சிறப்புமிக்க கயிலையினைத் தன்னகத்துக் கொண்ட வெள்ளித் திருமலை போன்றது அப்பொழுதே.
(வி-ரை) பாரிடம் - பூதம்; பேய்; இங்குச் சிவபூதங்களைக் குறித்தது; "பேயாய, நற்கணத்தி லொன்றாய நாம்" (அற். அந்). முன்னாம் - முதலாகிய; பல்கணம் - சிவகணங்களின் பல வகைகள்.
நேர்வுறும் - நேர்வு - நேர்மை; அருள் - ஒழுக்கம்; ஒப்பு என்பாருமுண்டு.
நிறைதலாலே - திருமலை போன்றது - உவமைக்குக் காரணங் கூறியபடி; இவர்கள் நிறைதல் பற்றி முன்னர்த் திருமலைச் சிறப்பிற் கூறியமையும், (14 - 21); ஆளுடைய அரசுகளுக்கு இறைவர் திருவையாற்றிற் கயிலைக் காட்சி அருளிய இடத்துக் கூறியவையும் (1639 - 1643) பார்க்க.
பேரருளாளர் எய்தப் பெற்ற மாளிகைதான் - "நீரும்போம்" எனக் கடிந்து மறுத்த பின்னரும் பொறுத்து அருள்புரிய வந்தமையும், "ஒளிவளர் செய்யபாதம் வருந்தவோ ரிரவு மாறா, தளிவரு மன்பர்க் காக வங்கொடிங் குழல்வீ ராகி, எளிவந்து" போந்தமையும் (3520) குறிக்கப் பேரருளாளர் என்றார். பேரருளாளராதலின் எனக் காரணக் குறிப்புடன் நின்றது; தான் - மாளிகை தானே என உறுதிப் பொருள் குறித்தது; எய்தப்பெற்ற - பூதர் முதலியோர் நிறைதலால் மட்டுமன்றிப் பேர் அருளாளர் எய்தப்பெற்றமையால் என்க.
தென்பால்....திருமலை - வடபால் உள்ள திருமலை போலத் தென்பாலில் உள்ள தொரு திருமலை.
கயிலை வெள்ளித் திருமலை - கயிலையைத் தன் முடியிலே கொண்ட வெள்ளிமலை. மாளிகை வெள்ளி மலையாகவும், அதனுள் இறைவர் போந்து நின்ற இடம் கயிலையாகவும் கொள்க. கயிலை என்னும் வெள்ளிமலை என்பார் முன் உரைகாரர்கள்; கயிலைமலை வெள்ளி மலையின் உயர்ந்த பல சிகரங்களுள் மிக வுயர்ந்த முடி; திருமலைச் சிறப்பிலுரைத்தவை பார்க்க.
அன்றே - அப்பொழுதே; அசையென் றொதுக்குவாரு முண்டு.
அன்பாற் சீர்வளர் - என்பதும் பாடம்.