ஐயரங் கணைந்த போதிலகிலலோ கத்துள் ளாரும் எய்தியே செறிந்து சூழ வெதிர்கொண்ட பரவை யார்தாம் மெய்யுறு நடுக்கத் தோடு மிக்கெழு மகிழ்ச்சி பொங்கச் செய்யதா ளிணைமுன் சேர விரைவினாற் சென்று வீழ்ந்தார். | 363 | (இ-ள்) ஐயர்....சூழ - எல்லாவுலகங்களிலுள்ளவர்களும் பொருந்தி நெருங்கிச் சூழ இறைவர் அங்கு எழுந்தருளியபோது; எதிர்கொண்ட....பொங்க - அவரை வரவேற்று எதிர்கொண்ட பரவையார் தாம் உடம்பில் பொருந்திய விதிர் விதிர்ப்புடனே மிக்கு மேலெழுகின்ற மகிழ்ச்சி மேன்மேற் பொங்க; செய்ய....வீழ்ந்தார் - அவரது செம்மையுடைய திருவடியிணையின் முன்பு பொருந்த விரைந்து சென்று வீழ்ந்தனர். (வி-ரை) சூழ அணைந்த போதில் - என்க; சூழ - சூழும்படி; சூழ்தல் - முன் உரைக்கப்பட்ட பாரிடத்தலைவர் முதலாயினோரன்றி ஏனைய மக்கள் முதலாயினோரும், வந்து சூழ்தல் குறித்தது; முன் கூறியவர்கள் கயிலையில் இறைவருடன் இருக்கத்தக்கார்; இங்குக் கூறிய அகில லோகத்துள்ளார் - அவ்வாறன்றி அன்று இறைவர் அத்திருமாளிகையில் யாவருங் காண எழுந்தருளியபோது கண்டு வந்து சூழும் பேறு மட்டில் பெற்ற இந்நிலவுலகம் முதலிய உலகத்தினர்கள்; உள்ளாரும் - உம்மை கயிலையில் இறைவருடன் உள்ள கணங்கள் முதலியவர்களுடன் கூடி இருக்கத் தகாத இவர்களும் என்று இழிவு சிறப்பு; இவர்களை இப்பாட்டில் வேறு பிரித்துக் கூறியது மிக்கருத்து. மெய்யுறு நடுக்கத்தோடும் மிக்கெழு மகிழ்ச்சி - முன்னர் எதிர்மொழிந்து கடிந்து மறுத்துப் போக்கிய அபராதத்தின் பொருட்டு நடுங்கினார்; ஐயர் தம்மீது வைத்த பெருங் கருணையினால் மீள எழுந்தருளியதன் பொருட்டு மகிழ்ச்சி மிக்கெழுந்தது. செய்ய தாளிணை - செம்மை செய்யும் திருவடிகள் - "கண்டு கொள்ளென்று காட்டிய, சேய மாமலர்ச் சேவடி" (திருவா-சென்னி-5) வீழ்ந்தார் - வீழ்தல் - தமது முயற்சியின்றி அடியற்ற மரம்போல வீழ்தல் என்றது குறிப்பு.
|
|
|