அரியயற் கரியார் தாமு மாயிழை யாரை நோக்கி "உரிமையா லூர னேவ மீளவு முன்பால் வந்தோம்; முருகலர் குழலா யின்ன முன்புபோன் மறாதே நின்பாற் பிரிவுற வருந்து கின்றான் வரப்பெற வேண்டு" மென்றார். | 364 | (இ-ள்) அரியயற்கு....நோக்கி - மாலுக்கும் பிரமனுக்கும் அறிதற்கரியவராகிய இறைவரும் பரவையாரை நோக்கி; உரிமையால்....வந்தோம் - தோழன் என்ற உரிமையினாலே, நம்பியா ரூரன் ஏவ மீண்டும் உன்னிடம் இப்போது வந்தோம்; முருகலர்....வேண்டும் - மணம் வீசுகின்ற கூந்தலையுடைய பரவையே! முன்புபோல மறுக்காதபடி உன்னைப் பிரிந்தமையால் வருந்துகின்றானாகிய நம்பி உன்பால் வரப்பெறுதல் வேண்டும்; என்றார் - என்று அருள்செய்தார். (வி-ரை) அறி அயற்கு அரியார் - அரிக்கும் அயனுக்கும் அறிவரியார்; அவர்களுக் கரியாராயினும் அடியவர்க் கெளிவந்தவர் என்பது குறிப்பு. ஆயிழையார் - ஆய்ந்த அணிகளை அணிந்தவர்; ஆய்தல் - நுணுக்கம்; இழை - நூல், எனக்கொண்டு நுணுகிய நூல்களை ஆராய்ந்த மதிநுட்பமுடையார் என்ற குறிப்புப்பட உரைக்கவும் நின்றது. "ஆயிழையாய்" (போதம்7 - சூத்.3 - அதி.வெண்பா) என்றவிடத்து எமது மாதவச் சிவஞான முனிவர் சிற்றுரையில் உரைத்தவை பார்க்க. "மதிநுதற் பரவையாரும்" (3513) என்று முன் உரைத்த குறிப்பும் காண்க. உரிமையால் ஊரண் ஏவ - உரிமை - தம்பிரான் றோழர் என்ற உரிமை; பாங்கற் கூட்டம் என்ற அகப்பொருட் பகுதிகளை ஒப்பு நோக்குக. ஊரன் -நம்பியாரூரன்; ஏவ - ஏவியதனால்; தமது எளிவரும் தன்மை குறித்தபடி. மீளவும் உன்பால் வந்தோம் - "நீரும்போம்" (3499) என மறுத்துப் போக்கிய பின்னும் உன்பால் வருதல் தகுதி யன்றாயினும் முன்வந்தது போலவே மீளவும் வந்தோம் என உம்மை இறந்தது தழுவியது; ஏவ - அவ்வாறு வந்ததற்குக் காரணம் கூறியபடி; உன்பால் - உன் தகுதியும் நோக்கி என்ற குறிப்பும் தருவது. முருகலர் சூழலாய்! - இயற்கை மணமுடைய கூந்தல் என்றது; பெண்களில் உத்தம விலக்கண முடையார்க்கு இயைவது; "அரிவை கூந்தலி னறியவு முளவோநீ யறியும் பூவே" (குறுந்); இதனால் குணமேன்மையும் குறித்தபடி; முன்புபோல் மறாது இசைவதற்குரிய தகுதி குறித்தவாறாம். முன்புபோல் மறாதே - இதனாலும், மீளவும் வந்தோம் என்றதனாலும், முன்னர் வந்தவர் தாமேயாம் என்று குறிப்பா லுணர்த்தியவாறு; மேல் இக்கருத் துணர்ந்தே "முன் எய்திய நீரோ?" (3519) என்று பரவையார் வினவியதும் காண்க. பிரிவுற வருந்துகின்றாள் - பிரிவு உற - பிரிவு என்னும் நிலை உற்றதனாலே என்று காரணப் பொருளில் வந்தது; பிறவுற்றமையால்; நின்பாற் பிரிவுற என்றும், நின்பால் வரப்பெற வேண்டும் என்றும் ஈரிடத்தும் கூட்டியுரைக்க வைத்த நயம் காண்க. "அணியிழை, தன்னோய்க்குத் தானே மருந்து" (குறள்) என்ற உண்மை புலப்பட வைத்த கவிநயமும் கண்டுகளிக்க. வரப்பெற வேண்டும் - வரப்பெறுதலை நீ இசைதல் வேண்டும் என்க; பெற - பெறுதலின் இசைவு. வருந்துகின்றான் - வருந்துகின்றானாகிய நம்பி என வினைப் பெயர். |
|
|