பெருந்தடங் கண்ணி னாரும் பிரான்முன்பு மிகவு மஞ்சி வருந்திய வுள்ளத் தோடு மலர்க்கரங் குழன்மேற் கொண்டே "அருந்திரு மறையோ ராகி யணைந்தீர்முன் னடியேன் செய்த இருந்தவப் பயனா மென்ன வெய்திய நீரோ? வென்பார், | 365 | (இ-ள்) பெருந்தடம் கண்ணினாரும்....கொண்டே - பெரிய விசாலமாகிய கண்களையுடைய பரவையாரும் இறைவர் முன்பு மிகவும் அச்சங்கொண்டு வருத்தம் பொருந்திய வுள்ளத்துடனே மலர் போன்ற கைகளைக் கூந்தலின் மேலே கூப்பிப்கொண்டே; அடியேன் செய்த....நீரோ - அடியேன் முன்னையிற் செய்த பெரிய தவத்தின் பயன்போல இப்பொழுது எழுந்தருளிய தேவரீரோ?; முன் - முன்பு; அருந்திரு....அணைந்தீர் - அரிய திருமறை முனிவராகிய அருச்சகர் கோலத்துடன் எழுந்தருளினீர்?; என்பார் - என்று சொல்வாராய்; (வி-ரை) பெருந்தடங் கண்ணினாரும் - முன்னர் "அங்கயல் விழியினாரும்" (3495) என்ற இடத்துப் பரம ராவ தறியாத நிலை; இங்கு அறிந்தபோது கண்ணோட்டம் பரந்து சிறந்ததென்று குறிப்பித்தது கவிநயம்; பெரும் - தடம் - ஒரு பொருட் பன்மொழி மிகுதி குறித்தது. குறுக்கும் நெடுக்குமாக நீண்டு அகன்ற எனினுமாம். அஞ்சி - பிரானாரை முன்ன் மறுத்து எதிர்மொழி கூறி - வலிந்து - போக்கியதனை எண்ணியஅச்சம். "அருமறை....நீரோ? என்பது இதன் காரணம் குறித்தவாறு. அடியேன் செய்த இருந்தவப் பயனாம் என்ன எய்திய செய்த - முன் செய்த; இருந்தவப் பயனாம் என்ன - பெருந் தவத்தினாலன்றி இறைவர் இவ்வாறு ஒரு முறைக் கிருமுறையும் வலிய எழுந்தருளி ஆட்கொள்ளும் பேறுகிட்டாதென்பது; எய்திய -இப்பொழுது எழுந்தருளிய. நீரோ - மறையோராகி முன் அணைந்தீர் - என்று கூட்டுக. என்பார் - முற்றெச்சம். எய்தினர் - என்பதும் பாடம். |
|
|