பாடல் எண் :3521

"நங்கைநின் றன்மைக் கேற்கு நன்மையே மொழிந்தா" யென்று
மங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போகத்
திங்கள்வா ணுதலி னாருஞ் சென்றுபின் னிறைஞ்சி மீண்டார்;
எங்களை யாளு நம்பி தூதர்மீண் டேகு கின்றார்,
367

(இ-ள்) "நங்கை.....மொழிந்தாய்" என்று - "நங்கையே! உன்னுடைய உயர்ந்த தன்மைக்குத் தகுந்தபடி நன்மையே உரைத்தாய்" என்று பரவையாரை நலங்கூறிப் பாராட்டி; மங்கையோர்....போக -உமையம்மையாரை ஒரு பாகத்தில் வைத்த வள்ளலாராகிய இறைவர் விரைந்து செல்ல; திங்கள்....மீண்டார் - சந்திரன் போன்ற ஒளி பொருந்திய நெற்றியினையுடைய பரவையாரும் சிறிது தூரம் பின்சென்று வணங்கி மீண்டனர்; எங்களை...ஏகுகின்றார் - எங்களை ஆட்கொண்டருளும் நம்பிகளது தூதராகிய இறைவர் மீண்டு அவர்பாற் செல்கின்றாராக,
(வி-ரை) நங்கை! - பெண்களிற் சிறந்தவளே!
நின் தன்மைக்கேற்ற நன்மையே - நினது அத்தன்மைக்குப் பொருந்திய நலப்பாடே; முன் "முருகலர் குழலாய்!" என்று தொடங்கிய குறிப்பும் ஆண்டுரைத்தவையும் பார்க்க.
மங்கையைப் பாகம் வைத்த வள்ளலார் - வள்ளன்மையுடன் கருணையையும் உடையவர் என்பது.
விரைந்து போக - செயல் நிறைவை அறிவித்து வினை முடிபாக்கும் தீவிரம்; மேல் (3523) இதன் காரணம் கூறுவார்.
திங்கள் வாணுதலினார் - பரவையார்; "மதிநுதற் பரவையார்" (3513) என்ற ஆண்டுத் தொடங்கியவாறே முடித்தபடி; ஆண்டுரைத்தவை பார்க்க.
சென்றபின் இறைஞ்சி - வழிவிடும் நிலையும், வழிவிட்டு விடைகொள்ளும் நிலையும் குறித்தது; நம்பிகளும் இவ்வாறே "பின்புசென் றிறைஞ்சி மீண்ட" நிலை (3512) காண்க; முன்முறையில் மறுத்து "நீரும்போம்" (3499) என்று போக்கியபோது இம்மரபு பிறழ்ந்தமை அப்போதிலிருந்த மனநிலை காரணமாக நிகழ்ந்த தென்க.
நம்பி தூதர் - பரவையார்பால் தாமாந்தன்மை அறிவுறு கோலத்தோடு வந்தமையால் "மங்கை பாகர்" என்றதும், நம்பிகள் பால் செல்லும் நிலைபற்றி அதற்கேற்பத் தூதர் என்றதும் கருதுக. இவ்வாறு தூதாகச் சென்றமை நம்பிகள் திருவாக்கில் வரும் பல அகச்சான்றுகளாலும் விளங்குவதாம்; "அடியேற் கெளிவந்த தூதனை" (நள்ளாறு); "தூதனை யென்றனையாள் தோழனை" (கானப்பேர்) என்பன முதலிய பலவும் காண்க.
ஏகுகின்றார் - ஏகுகின்றாராகி; முற்றெச்சம்.
ஏகுகின்றார் - ஆளும் தொழில் - என்று வரும்பாட்டுடன் முடிக்க.