பாடல் எண் :3522

ஆதியு மேலு மாலய னேடற் கருளாதார்
தூதினி லேகித் தொண்டரை யாளுந் தொழில்கண்டேவீதியி லாடிப் பாடி மகிழ்ந்தே மிடைகின்றார்பூதியி னீடும் பல்கண நாதர் புகழ்வீரர்,
368

(இ-ள்) ஆதியும்....அருளாதார் - அடியினையும் முடியினையும் முறையே மாலும் பிரமனும் நாடிக் காணுதற்கு அருளாத இறைவர்; தூதினில்.....தொழில் கண்டே - தாமே தூதாகச் சென்று தொண்டனாரை ஆட்கொள்ளும் அந்த அருட்செயலைக் கண்டே; பூதியில்....வீரர் - அனுபூதியில் சிறந்து திளைக்கின்ற பலவகைப் பட்ட சிவபூத கணநாதர்களும் புகழுடைய வீரர்களும்; வீதியில்....மிடைகின்றார் - அத்திருவீதியிலே ஆடியும் பாடியும் மகிழ்ச்சியோடு நெருங்குகின்றார்களாகி;
(வி-ரை) ஆதியும் மேலும் - மாலயன் நாடற்கு - ஆதி - அடி; மேல் - முடி; ஆதியினை மாலும், மேலினை அயனும் முறையே நாடற்கு என்று நிரனிறையாகக் கூட்டுக.
மாலயற் கருளாதார்....தூதினில் ஏகித் தொண்டரை ஆளும் - அவர்கள் ஆட்படாமையின் அருளாதார்; தொண்டர் ஆட்பட்டமையால் அருளினார் என்பது. அரியயற்கு அருளாத காரணம் பற்றி இலிங்க புராணத் திருக்குறுந்தொகை பார்க்க. "தேவர்கள் ஆள்கொடுத் தெம்போ லரனை யறிகிலர்" (திருமந்திரம்) என்பது முதலியவை பார்க்க.ஆளும் தொழில் கண்டே - இறைவரது அடியார்க்கெளிவரும் பெருங்கருணையே நேரே கண்டு.
பூதி - அனுபூதி; சிவானுபூதி; பூதியில் நீடுதல் - யோக நிலையில் உள்ளே எப்போதும் சிவானந்தத்தில் திளைத்திருத்தல்; உள்நிறைந்த சிவானுபூதியினை இங்குப் புறத்திலும் கண்டு மகிழ்ந்தனர். சிவானுபூதி - சிவனை உள்ளே கண்டு கொண்டு அவனது அருளில் திளைத்து மூழ்கிய அனுபவநிலை;"மாறாத சிவானு பல மருவிக் கொண்டே" (சித்தி - 11-1); "மெய்யே கண்டுகொண் டிருப்பர் ஞானக் கடலமு தருந்தி னோரே" (சிவப் - 98) என்பனவாதி ஞானநூல் உண்மைகள் காண்க. பூதி - விபூதி - திருநீறு என்றனர் முன் உரைகாரர்கள்.
புகழ் வீரர் - பாரிடத் தலைவர் முதலாக முன் (3516) சொல்லப்பட்டவர்கள்; வீரமாவது சிவனடிமைத் திறத்தால் வருவது;"வீர மென்னால் விளம்புந் தகையதோ?"
கணநாதப் புகழ்வீரர் - என்றுபாடங் கொள்வாருமுளர். மேல் பல வகையினரைக் கூறி "முன்னும் பின்னும் மருங்கும்" என்று முறைமையும் வகுத்தலின் அது பொருந்தாமை யறிக.