பாடல் எண் :3523

அன்னவர் முன்னும் பின்னும் மருங்கு மணைவெய்த
மின்னிடை யார்பா லன்பரை யுய்க்கும் விரைவோடுஞ்
சென்னியி னீடுங் கங்கை ததும்பத் திருவாரூர்
மன்னவ னாரம் மறையவ னார்பால் வந்துற்றார்.
369

(இ-ள்) அன்னவர்....அணை வெய்த - அத்தகையோர்கள் தமது முன்னும் பின்னும் பக்கங்களிலும் முறைமைப்படி சார்ந்து வர; திருவாரூர் மன்னவனார் - திருவாரூரினை அரசாளும் தியாகராசர்; மின்னிடையார்..விரைவோடும் - மின்போன்ற இடையினை உடைய பரவையாரிடத்துத் தம் அன்பராகிய நம்பிகளைச் சேர்க்கின்ற விரைவினோடும்; சென்னியில்....ததும்ப - தமது தலையிலே நீடிய கங்கையாறு அலைத்து மோத; அம்மறையவனார்பால் வந்துற்றார் - அந்த மறையோராகிய நம்பிகளிடம் வந்து சேர்ந்தருளினர்.
(வி-ரை) அன்னவர் - முன்கூறிய அத்தகைய கணநாதர் புகழ்வீரராகிய அவர்கள்.
முன்னும் பின்னும் மருங்கும் - இறைவரது முன்னரும் பின்னரும் பக்கங்களிலும் அவ்வவர் முறைமைக் கேற்ப.
மின்னிடையாள்......விரைவோடும் - இம்முறை மீண்டு செல்லும்போது இறைவர் விரைவின் ஏகுதலின் காரணம் கூறியபடி; தளர்ந்து வீழ்ந்த நம்பிகளது இடுக்கண் கண்டு தரியாது (3510) போந்தாராதலின் விரைவின் ஏகினார்.
சென்னியில்....ததும்ப - சென்னியில் சடைக்கற்றையின் கரையினளவில் நிறைந்து நிற்கும் பரந்த நீராதலின் ஐயர் விரைவின் ஏகிய அசைவினால் நீர் ததும்பிற்று என்பது கவிநயம். கருணை வெள்ளம் ததும்ப என்பது குறிப்பு.
மன்னவனார் - மறையவனார்பால் வந்துற்றார் - மன்னர் மறையவரிடம் தேடிவருதல் தகுதி என்ற சொற்சுவைபடக் கூறியது கவிநயம்; மறையவனார் - சிறப்புக் குறித்தது; திருவாரூர் மன்னவனார் - தியாகராசர்.
மன்னவனார்தா மன்பினர்தம் - என்ற பாடமுமுண்டு.