அன்பரு"மென்பா லாவி யளிக்கும் படிபோனார் என்செய்து மீள்வா ரின்னமு" மென்றே யிடர்கூரப் பொன்புரி முந்நூன் மார்பினர் செல்லப் பொலிவீதி முன்புற நேருங் கண்ணிணை தானு முகிழாரால். | 370 | (இ-ள்) அன்பரும்....இடர்கூர - அன்பராகிய நம்பிகளும் "என்னிடத்து உயிரினை அளிக்கும்படி என்று சென்றவராகிய இறையவர் இன்னமும் என்ன செய்து மீள்குவரோ?" என்றே வருத்தம் மிக; பொன்புரி...முகிழாரால் - பொன்னாற் புரித்திட்டது போன்ற பூணூல் அணிந்த மார்பினையுடைய இறைவர் செல்லப் பொலிவு பெற்ற அத் திருவீதியினை எதிர்நோக்கும் தமது கண்களை இமைக்காதிருந்தனர். (வி-ரை) ஆவி அளிக்கும்படி - "அவள்பால் இன்று மேவுதல் செய்யீராகில் விடுமுயிர்" (3509) என்றபடி நீங்கும் "நிலையிலிருந்த உயிரினைத் தரும்படி; ஆவி - ஆவி போன்ற பரவையை என்ற குறிப்புப்பட உரைத்தலும் ஆம்; என்பால் - என்பாற் பொருந்த; "என்னின் னுயிரா மன்னமென" (297); "ஆவி நல்குவ ராரூரை யாண்டவர், பூவின் மங்கையைத் தந்தெனும்" (302) என்று முன் கூறிய கருத்துக்கள் காண்க; மேற்பாட்டிலும் "உயிர் நல்கும்" (3525) என்பதும் காண்க. இன்னமும் என் செய்து மீள்வாரோ? என்க; இன்னமும் - முன்னர்ச் சென்ற காரியம் நிறைவு செய்யாது மீண்டமை போல இன்னமும் என உம்மை இறந்தது தழுவிற்று; என் செய்து - நிறைவு செய்வதும் அது செய்யாமையும் அவர் செயலே யன்றி மற்றும் உயிர்களின் செயலாவது ஒன்றுமில்லை என்பதும் குறிப்பு. இடர் கூர - கூர்தல் - மிகுதல்; கூர - கூர்தலினால்; கூர - நேரும் கண்ணிணை-முகிழார்-எனக் காரணப் பொருளில் வந்தது. வீதி முன்புற நேரும் கண்ணிணை - தானும் முகிழார் - வீதியினை எதிர் நோக்கிய வண்ணம் பார்த்த கண்கள் இமையாராயினர்; முன்புற நேரும் - இறைவரது வரவினை எதிர்நோக்கும். தானும் - உம்மை முற்றும்மை; சிறப்பும்மையுமாம்; மனம் இடர்கூர வருந்துதலோடு கண் தானும் என்றலுமாம். முகிழ்த்தல் - இமைத்தல் - மூடுதல். முகிழாதால் - என்பதும் பாடம். |
|
|