அந்நிலை மைக்கண் மன்மதன் வாளிக் கழிவார்தம் மன்னுயிர் நல்குந் தம்பெரு மானார் வந்தெய்த முன்னெதிர் சென்றே மூவுல குஞ்சென் றடையுந்தாள் சென்னியில் வைத்"தென் சொல்லுவ" ரென்றே தெளியாதார், | 371 | (இ-ள்) அந்நிலைமைக் கண்....எய்த - (நம்பிகள்) அந்நிலையில் நின்ற போது மன்மதனது அம்புகள் வீழ இடைந்த நம்பிகளது நிலை பெற்ற உயிரினைத் தந்தருளும் தமது பெருமானார் வந்து சேர; முன் எதிர்....வைத்து - அவர் திரு முன்பு எதிர்கொண்டு சென்றே மூவுலகங்களும் சென்று அடையும் அவரது திருவடிகளைச் சிரத்தில் வைத்துப் பணிந்து; என்......தெளியாதார் - என்ன சொல்வார் என்றே தெளியாதாராகி, (வி-ரை) மன்மதன் வாளிக்கழிவார் - என்ற துபசாரம்; உலகியல்பற்றிக் கூறியதாம். நம்பிகள் காமவசப்பட்டு வருந்தினார் என்பதன்று. இது பற்றி முன் உரைத்தவை பார்க்க; எவ்வண்ண நிற்பினும் சிவன் பாலன்றிச்சிந்தை பிறழாத சிவயோக நிலையின் நிற்பது நம்பிகள் திருவுள்ளம் என்பது ஈண்டுக் கருதத்தக்கது. "சீவன்முத்தர் சிவமேகண் டிருப்பர்" (சித்தி - 11 - 1). உயிர் நல்கும் - முன் "ஆவியளிக்கும்படி போனார்" (3524) என்றது காண்க. மூவுலகுஞ் சென்றடையும் தாள் - மூவுலகிலும் உள்ள எல்லாவுயிர்களும் துன்பநீக்கத்தின் பொருட்டுச் சென்று புகலடையும் திருவடி. இவ்வாறன்றிச் சங்கார காலத்து யாவும் திருவடியினொடுங்கிச் சிருட்டிக் காலத்து ஒடுங்கிய முறையே தோற்றும்திருவடி என்று உரைத்தனர் முன் உரைகாரர். என் சொல்லுவர் என்றே தெளியாதார் - முன்முறை "உறுதிசெய் தணைந்தார் என்றே" (3505) எண்ணிக் கொண்டதற்கு மாறாக நிகழ்ந்தமையால் இம்முறை தெறியாராயினார். இதனாலே "என் கொடுவந்தீர் குறை" என்றுமேல் வினவலாயினர். தெளியாதார் - தெளியாராகி; முற்றெச்சம்,. தெளியாதார் - என்ன - எனவரும் பாட்டுடன் முடிக்க.
|
|
|