பாடல் எண் :3526

"எம்பெரு மானீ! ரென்னுயிர் காவா திடர்செய்யுங்
கொம்பனை யாள்பா லென்கொடு வந்தீர் குறை?"
யென்னத்,
தம்பெரு மானுந்"தாழ்குழல் செற்றந் தணிவித்தோம்;
நம்பி யினிப்போய் மற்றவ டன்பா னணு" கென்ன,
372

(இ-ள்) "எம்பெருமானீர்!....குறை" என்ன - "எமது பெருமானே! எனது உயிரைக் காவல் செய்யாது துன்பம் செய்கின்ற கொம்பு போன்ற பரவையிடத்தினின்றும் யாது குறை கொண்டு வந்தீர்?" என்று வினவ; தம்பெருமானும்.....என்ன - "தமது பெருமானாகிய இறைவரும் தாழ்ந்த குழலினையுடைய பரவையினது புலவியினால் வந்த கோபத்தினைத் தணியச் செய்தோம்; நம்பியே! இனி நீ போய் அவள்பாற் சேர்வாயாக" என்று அருள,
(வி-ரை) என்னுயிர் காவாது இடர் செய்யும் கொம்பனையாள் - உயிர் காத்தல் - உயிரைப் பாதுகாத்தல்; இடர் செய்யும் - பாதுகாத்தல் நாயகியின் கடனாயிருப்பவும் அதனைச் செய்யாமையே யன்றி இடரையும் செய்யும் என்பது; இடர் செய்தலினாலே காவாது என்றுரைப்பினுமாம்; கொம்பு அனையாள் - உவமை, உணர்வின் குறைவு காட்டும் குறிப்புமாம்.
குறை என் கொடுவந்தீர் - என்க; குறை - முன்னர்க் கொண்டு வந்தது போலச் செயல் நிறைவேறாத நிலை; என் கொடு - வேறும் ஒன்றை என்றது குறிப்பு.
தாழ்குழல் - பரவையார்; வினைத்தொகையன் மொழி; தாழ்தல் - வணங்குதல் என்ற குறிப்புடன் நின்றது; தாழ் - முன்னர் வணங்காது நின்றதுபோ லன்றி அடியில் வீழ்ந்து தாழ்ந்த என்ற குறிப்புக் காண்க. "தாளினைமுன்சேர விரைவினாற் சென்று வீழ்ந்தார்" (3517).
செற்றம் - புலவி காரணமாக வந்த சினம்; "செற்ற நிலைமை" (3472).