நந்தி பிரானார் வந்தருள் செய்ய நலமெய்துஞ் சிந்தையு ளார்வங் கூர்களி யெய்தித் திகழ்கின்றார் "பந்தமும் வீடும நீரருள் செய்யும் படிசெய்தீர எந்தை பிரானே! யென்னினி யென்பா லிடர்?"என்றார். | 373 | (இ-ள்) நந்தி......அருள் செய்ய - நந்தி என்னும் திருநாமமுடைய எமது பெருமானார் வந்து இவ்வாறு அருளிச்செய்ய; நலமெய்தும்...திகழ்கின்றார் - நன்மை பொருந்தும் திருவுள்ளத்திலே ஆசை மிகுதலினாலே உண்டாகிய மகிழ்ச்சி பொருந்தி விளங்குகின்றாராகி; பந்தமும்.....என்றார் - பந்தத்தையும் வீட்டையும் நீரே உயிர்களுக்கு அருளும் நிலைக் கேற்றவாறே செய்தருளினீர்! எமது பெருமானீரே! இனி எனக்கு என்ன துன்பம் உள்ளது? என்று போற்றினார். (வி-ரை.) நந்திபிரானார் - நந்தி - இறைவரது திருநாமங்களுள் ஒன்று; உயிர்களின் வினைத்துயரை நந்துறல் (குறைத்தல் - ஒழித்தல்) செய்பவன்; இங்கு நம்பிகளது துன்பமுழுதும் ஒழித்தமை குறிக்க இப்பெயராற் கூறினார்; இப்பெயர், இறைவரது கோயில் நாயகரும், அவரால் முதல் உபதேசம் பெற்றவரும், நம் குரு மரபுக்கெல்லாம் முதற் குருவுமாக உள்ளமையால் திருநந்தி தேவருக்கு வழங்கலாயிற்று ஆர்வம் கூர்களி - ஆர்வம் மிகுதலினால் வரும் களிப்பு. பந்தமும் வீடும் நீர் அருள் செய்யும்படி - தகுதிக்கேற்ப உயிர்களுக்குப் பிறவியும் வீடும் நீரே தருகின்ற முறைமைப்படி; "பந்தமு மாய்வீடு மாயினாருக்கு" "பந்தமும் வீடும் படைப்போன் காண்க" (திருவா); இவையே ஐந்தொழிற் பெருங் கூத்தை உணர்த்துவன; "பந்தம் வீடு தரும்பர மன்கழல்" (300) என இக்கருத்தையே முன்னரும் பரவையாரைப் பற்றிய நிலையினும் உரைத்தது காண்க. ஆண்டுரைத்தவை பார்க்க. செய்யும்படி செய்தீர் - படி - உவம உருபு. உயிர்களுக்கு பந்தமும் வீடும் தருவது போலவே என்பால் முன்னர்த் துன்பமும் இப்பொழுது அதினின்றும் விடுதி பெறும் இன்பமும் செய்தீர்; பந்தம் - துன்பம்; வீடு - இன்பம்; எல்லாம் உமது செயலே என்று போற்றிய நிலை. இனி என்பால் இடர் என்? என்க; வினா, இன்மை குறித்தது. |
|
|