பாடல் எண் :3528

என்றடி வீழு நண்பர்தம் மன்புக் கெளிவந்தார்
"சென்றணை நீயச் சேயிழை பா"லென் றருள்செய்து
வென்றுயர் சேமேல் வீதி விடங்கப் பெருமாடம்
பொன்றிகழ் வாயிற் கோயில் புகுந்தார் புவிவாழ.
374

(இ-ள்) என்றடி....எளிவந்தார் - முன் கூறியவாறு சொல்லித் தமது திருவடியில் வீழ்ந்த நண்பராகிய நம்பியினது அன்புக்கு எளிமையாய் வந்த இறைவர்; சென்றணை....அருள் செய்து -" நீ அந்தப் பரவையி னிடம் சென்று சேர்வாயாக" என்று அருளிச் செய்து; வீதிவிடங்கப் பெருமான்தாம்- அந்த வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகேசர்; வென்றுயர் சேமேல் - வெற்றி பொருந்திய மேன்மையுடைய இடபத்தின் மேலே எழுந்தருளி; பொன்திகழ்.....புலிவாழ - பொன் விளங்கும் திருவாயிலினையுடைய தமது திருப் பூங்கோயிலினுள்ளே உலகம் வாழும்படி புகுந்தருளினர்.
(வி-ரை) என்று - முன் (3527) கூறியவாறு சொல்லி.
நண்பர் - நம்பிகள்; நண்பு - தோழமை; பற்றியே தூது சென்றாராதலின் அக்குறிப்புப்படக் கூறியவாறு; "உரிமையர லூர னேவ" (3518).
அச்சேயிழை - "என்னுயிர் காவா திடர்செய்யும் கொம்பனையாள்" (3526) என்று நீ கொண்ட அந்த என முன்னறிசுட்டு; நீ நம்மை விரும்பி வேண்டிய அந்த; உனக் கினியளாய் "முல்லை முகைவெண் ணகைப்பாவை" முன் கூறிய அந்த என்று உரைப்பனவுமாம்.
வென்று உயர் சே - வெற்றியும் உயர்வும் பொருந்திய இடபம்; "சேவேந்து வெல்கொடியான்"; சே - இடபம்.
வீதிவிடங்கப் பெருமாள் - வீதியில் எழுந்தருளும் சுயம்பு, தியாகேசர்.
பொன் திகழ் வாயிற் கோயில் - பொன்னாற் பொலியச் செய்த திருவாயில்; பொன் - இலக்குமி என்று கொண்டு இலக்குமி வரங்கிடந்து விளக்கமுற்ற என்றலுமாம்; கோயில் - பூங்கோயில்.
புவி வாழப் புகுந்தார் - புவிவாழ்தல் - அத்திருக்கோயிலில் விளங்க வீற்றிருப்பதனால் அங்கு வந்தடையும் உயிர்கள் எல்லாம் உய்தி பெறுதல்.