தம்பிரா னார்பின் சென்று தாழ்ந்தெழுந் தருளான் மீள்வார் "எம்பிரான் வல்ல வா"றென் றெய்திய மகிழ்ச்சி யோடும் வம்பலர் குழலார் செம்பொன் மாளிகை வாயி னோக்கி நம்பியா ரூரர் காத னயந்தெழுந் தருளும் போது | 375 | (இ-ள்) தம்பிரானார்...மீள்வார் - தமது பெருமானாரின், பின்பு சிறிது தூரம் சென்று வழிவிட்டு வணங்கி எழுந்து அருள்விடை பெற்று மீள்வாராகி; எம்பிரான்...மகிழ்ச்சியோடும் - எமது பெருமானது "எல்லா வல்லவாறு தான் என்னே!" என்று, பொருந்திய மகிழ்ச்சியுடனே; வம்பலர்....எழுந்தருளும் போது - மணம் விரிகின்ற கூந்தலையுடைய பரவையாரது செம்பொன் விளங்கும் திருமாளிகையின் வாயிலை நோக்கி நம்பியாரூரர் காதலால் விரும்பி எழுந்தருளும்பொழுது, (வி-ரை) பின்சென்று....மீள்வார் - மரபின்படி சிறிது தூரம் பின் சென்று வழிவிட்டு வணங்கி விடைகொள்ளும் முறை; முன் (3521) உரைத்தவை பார்க்க. "எம்பிரான் வல்லவாறு!" என்று - இது நம்பிகளின் மனத்தின் அற்புத உணர்ச்சியின் எழுந்த எண்ணம். சிறிது போதினில் முன்முறை சென்றபோது "நாமே வேண்டவும் வெம்மைதான் சொல்லி மறுத்தாள்"(3506) என்று மீண்டருளியதும், பின்முறை "தாழ்குழல் செற்றந் தணிவித்தோம்"(3526) என்றதும் ஆகிய இந்த இரண்டு நிலைகளும் இவரையன்றி யில்லையாதலின் வல்லவாறு! என்று அற்புதமடைந்த தன்மை. இதற்கு இவ்வாறன்றி, எம்பிரானது வல்லமையால் முடிவதாயிற்று - நிறைவேறிற்று - என்றுரைப்பர் முன் உரைகாரர்; அவர் இது முடிந்ததென்பது அவாய்நிலையால் வந்ததென்றும், ஆறு - என்பதற்கு ஆற்றால் என மூன்றனுருபு விரித்தும் பொருள் கூறுவர். வம்பலர் குழலார் -"முருகலர் குழலாய் (3518) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. மேலும் "வண்டுலாங் குழலார்"(3534) என்பதும் காண்க. காதல் நயந்து - காதலால் விரும்பி; நோக்கி - குறித்து. |
|
|