முன்றுயி லுணர்ந்து சூழ்ந்த பரிசன மருங்கு மொய்ப்ப மின்றிகழ் பொலம்பூ மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த மன்றல்செய் மதுர சீத சீகரங் கொண்டு மந்தத் தென்றலு மெதிர்கொண் டெய்துஞ் சேவக முன்பு காட்ட, | 376 | (இ-ள்) முன்...மொய்ப்ப - முன்னரே துயில் நீங்கி விழித்து எழுந்து சூழ்ந்த பரிசனங்கள் பக்கத்தில் நெருங்கிச் சூழ; மின்திகழ்....வாழ்த்த - ஒளியுடைய அழகிய தெய்வ மலர்மழையினைத் தேவர்கள் பொழிந்து வாழ்த்த; மன்றல் செய்...முன்பு காட்ட - மணம் விளங்கும் இனிய குளிர்ந்த நீர்த் திவலைகளுடன் கூடி மெல்லியதாய்த் தென்றலும் எதிர்கொண்டு செல்லும் பணியை முன்னே செய்து வர, (வி-ரை) முன் துயிலுணர்ந்து சூழ்ந்த - முன் - நம்பிகள் துயிலுணர்த்தி ஏவு முன்னமே பரிசனத்தின் கடமைப்பாடுடைய நிலை குறித்தது. துயிலுணர்தல் - விழித்தல். விண்ணவர் பூமாரி பொழிந்து வாழ்த்த என்க; இது திருவருள் வெளிப்பாடு கண்டபோது தேவர்கள் செய்தல். மன்றல் செய் - மணம் வீசும்; சீகரம் - நீர்த்தூவல்; தென்றல் நீர்த்தூவலுடன் வீசிற்று; நீர் கலத்தல் குளிர்ச்சியை மிகுதிப்படுத்தியது என்பது. மந்தத் தென்றல் - மெல்லிதாய் வீசும் தென்றற் காற்று; மந்தமாருதம் என்பர். எதிர்கொண்டு எய்தும் சேவகம் - நம்பிகளை எதிர்கொண்டு வந்து கவரி வீசி உபசரிப்பது போன்ற பணி; எதிர் கொள்ளுதல் - தற்குறிப்பேற்றம்; தென்றல் எதிர்கொண்டு - என்றதனால் நம்பிகள் தேவாசிரியனினின்றும் போந்து, வடக்கு நின்றும் தெற்கு நோக்கி எழுந்தருளினார் என்றும், பரவையார் திருமாளிகை தெற்குத் திருவாயிலினின்றும் தெற்கே உள்ளதென்றும் கருத இடமுண்டு; இந்நாளில் பரவையார் திருமாளிகை என்று வழங்கும் கோயிலும் இவ்வாறே அமைந்துள்ளதும் காண்க. முன்பு - காலத்தாலும் இடத்தாலும் முன்பு. காட்ட -நிலைமை புலப்படுத்த. |
|
|