இவ்வகை யிவர்வந்தெய்த, வெய்திய விருப்பி னோடு மைவளர் நெடுங்கண் ணாரு மாளிகை யடைய மன்னுஞ் செய்வினை யலங்கா ரத்துச் சிறப்பணி பலவுஞ் செய்து நெய்வளர் விளக்குத் தூப நிறைகுட நிரைத்துப் பின்னும், | 378 | (இ-ள்) இவ்வகை....எய்த - இவ்வாறாக இவர் வந்து சார; (இதனிடையில்); எய்திய ....செய்து - பொருந்திய விருப்பத்தினோடும் மைதீட்டிய நீண்ட கண்ணையுடைய பரவையாரும் மாளிகை முற்றிலும் நிலைபெற்ற செய்தொழிலால் மிகும் அலங்காரத்துக்குரிய சிறப்புடைய அணிகள் பலவற்றையும் செய்து; நெய்வளர்...நிரைத்து - நெய் நிறைந்த விளக்குக்களையும் தூபங்களையும் நீர்நிறைகுடங்களையும் வரிசைபெற அமைத்து; பின்னும் - அதன் மேலும், (வி-ரை) இவர் - நம்பிகள் பரிசனங்களை யுள்ளிட்ட இவர்கள் என்றலுமாம். எய்திய விருப்பினோம் - நம்பிகளைக் "காதல் நயந்து" (3529) என்றதற்கேற்பப் பரவையாரை எய்திய விருப்பினோடும் என்றது இருபாலும் விருப்பம் மூண்ட நிலை குறித்தது. மைவளர் நெடுங்கண்ணாரும் - முன்னர்ப் புலவியாற் சிவந்திருந்த கண்கள் இப்போது புலவி நீங்கியதனால், "கருங்குவ ளைச்செவ்வி யோடிக்கெழுமினவே"(கோவை) என்றபடி, அது மாறிக் கண்ணோட்டமுடன் நீண்டன என்பது குறிப்பு. "பெருந்தடங் கண்ணி னாரும்" (3519) என்றலும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; மைவளர் என்றது இப்பொழுது மையிட்டு அணி செய்யப்பட்டதென்ற குறிப்புமாம். அடைய - முற்றும். மன்னும்......சிறப்பணி - நிலைபெறச் செய்த கைபுனைந்த அலங்காரங்களைத் திருத்திச் சிறக்கச் செய்து; இவை நிலையான அலங்காரங்களைச் சிறப்புக் காணக் கவின் செய்தல்; இப்போது செய்யும் அலங்காரங்கள் மேற்பாட்டிற் கூறுவார். நெய்வளர் விளக்கு - நெய்விளக்குக்கள் குணம் மிகுந்தன; தூபம் - வாசங்கமழ் புகை. நிரைத்தல் - வரிசைபட அமைத்தல். |
|
|