பூமலி நறும்பொற் றாமம் புனைமணிக் கோவை நாற்றிக் காமர்பொற் சுண்ணம் வீசிக் கமழ்நறுஞ் சாந்து நீவித் தூமலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்தத் தாமும் மாமணி வாயின் முன்பு வந்தெதி ரேற்று நின்றார். | 379 | (இ-ள்) பூமலி....நாற்றி - பூக்கள் பொலிந்த மணமுடைய அழகிய மாலைகளையும், மணிகள் புனைந்த கோவைகளையும் தொங்கவைத்து; காமர்....நீவி - விருப்பம் தரும் பொற்சுண்ணத்தை வீசி மணமுடைய நறிய சந்தனத்தால் மெழுகி; சூழ்ந்த தோகையர் வாழ்த்த - சுற்றிலுமுள்ள தமது தோழியர்கள் வாழ்த்துக்களைச் சொல்ல; தூமலர் வீதி - தூய்மையாகிய மலர்கள் நிறைந்த திருவீதியிலே; மாமணி வாயில் முன்பு வந்து - பெரிய மணிகள் பொருந்திய திருவாயிலின் முன்பு வந்து; தாமும் - (பரவையார்) தாமும்; எதிர் ஏற்று நின்றார் - (நம்பிகளை) வரவேற்று நின்றனர். (வி-ரை) பூ....தாமம் - பூமாலைகள்; பொன் - அழகு; நறுமை - மணம்; தாமம் - பூமாலைகள்; மணமலர் மாலைகள். மணிக்கோவை - மணிமாலைகள்; இவை வேறு. நாற்றுதல் - அங்கங்கும் அளவு பெறத் தொங்க வைத்தல். பொற்சுண்ணம் - வாசனைப் பொடி;வீசுதல் - பலவிடமும் பரவத் தூவுதல்; நீவுதல் - மெழுகுதல்; காமர் - விரும்பத்தக்க; காமம் மருவும் என்பர் நச்சினார்க்கினியர். சூழ்ந்த தோகையர் - தோழியர்;வாழ்த்தல் - பாராட்டுதல். தூமலர் வீதி வாயில் முன்பு - என்க; வீதிவாயில் என்றது முன்வாயில்; வீதி தோகையர் - அத்தெருவிலுள்ள பெண்கள் என்றுரைத்தனர் முன் உரைகாரர்; தூமலர் வீதி - இப்பொழுது மலர்மாலைகளால் அணி செய்த வீதி; தேவர்கள் பொழிந்த தெய்வ மலர்கள் (3530) நிறைந்த வீதி என்ற குறிப்புமாம். வாயில் முன்பு - வாயிலின் வெளிப்புறத்து; முதலில் இறைவர் வந்து அழைத்ததும், (மணிவாயில் - 3492) அப்போது மீண்டு அவர் போயினபின் தாம் வாயிலே பார்த்து அழிந்ததற் கிடமாகியதும் ஆகிய அத்திருவாயிலே இப்போது வரவேற்க நின்றது என்பது குறிப்பார் தூ மணி - என்ற இரண்டு அடைமொழிகளாற் சிறப்பித்தார். தாமும் - தோழியர்களுடனே தாமும் என எச்சவும்மை. புலந்திருந்த தாமும் எனச் சிறப்பும்மையுமாம். எதிர் ஏற்று நின்றார் - எதிர் வரவு ஏற்கும் நிலையில் நின்றனர். இருதிறமும் ஒரே காலத்தில் அன்பினா னிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பிரிப்பின்றி ஒரு முடிபாகத் தொடர்ந்து இவ்வைந்து பாட்டுக்களாற் கூறிய நயமும், நான்காவது பாட்டில் இருவர் செய்கையும் சேரவைத்துக் கூறிய நயமும், புலவி தீர்ந்த பின்பு இருபாலும் அன்பு நிறைந்த நிலையின் நிகழ்ச்சிகளை இழுமென்னும் ஓசையின் வேறு யாப்பாற் றொடங்கிக் கூறிய நயமும், முன் கூறிய ஐஞ்சீர்க் கலிநிலைத்துறை விருத்தத்தினின்று இங்கு அறுசீர்க் கழிநெடில் விருத்தமாகத் தொடங்கிய நயமும் கவிநலங்களாம். |
|
|