பாடல் எண் :3534

வண்டுலாங் குழலார் முன்பு வன்றொண்டர் வந்து கூடக்
கண்டபோ துள்ளக் காதல் வெள்ளத்தின் கரைகா ணாது
கொண்டநா ணச்சங் கூர வணங்கவக் குரிசி லாருந்
தண்டளிர்ச் செங்கை பற்றிக் கொண்டுமா ளிகையுட் சேர்ந்தார்.
380

(இ-ள்) வண்டுலாம்....கூட - அவ்வாறு நின்ற, வண்டுகள் உலவுதற் கிடமாகிய கூந்தலையுடைய பரவையார் தமது முன்பு வன்றொண்டராகிய நம்பிகள் வந்து சேர; கண்டபோது....கரைகாணாது - கண்டபொழுது உள்ளத்திலே எழுந்த காதற் பெருக்கத்தின் எல்லை காணமாட்டாராகி; கொண்ட....வணங்க - மேற்கொண்ட நாணும் அச்சமும் மிகுதியாகப் பெருக அவரை வணங்க; அக்குரிசிலாரும்...சார்ந்தார் - அந்தப் பெருமையுடையாராகிய நம்பிகளும் அவரது குளிர்ந்த தளிர் போன்ற செவ்விய கையினைப் பற்றிக்கொண்டு திருமாளிகையினுள்ளே புகுந்தனர்.
(வி-ரை) வண்டுலாங் குழலார் - 3485 - 3529 - பார்க்க.
வன்றொண்டர் - முன்னரும் இப்பெயராற் கூறிய குறிப்பும் நினைவு கூர்க. 3484 முதலியவை பார்க்க.
கண்டபோது - என்றது காட்சி காரணமாகிய நிகழ்ச்சியினையும்,உள்ளக் காதல்....வணங்க - என்றது அதனால் விளைந்த அகநிகழ்ச்சியினையும் குறித்தன.
நாண் அச்சம் - பெண்மைக்கு இயல்பாகிய நாண் முதலிய நாற்குணங்களுள் இவை ஈண்டு வெளிப்பட்டன என்ற பொதுமைக் குறிப்பும், மூண்ட புலவியினால் தாம் செய்தவற்றையும் சொல்லியவற்றையும் எண்ணியதனால் நாணும், தமது நாயகராகிய தலைவர்பாலினும் இறைவர் பாலினும் செய்த அபசாரங்களை எண்ணியதனால் அச்சமும் கொண்டனர் எனச் சிறப்புக் குறிப்பும் போந்தன; நாற்குணங்களுள் மடம் பயிர்ப்பு என்ற ஏனையவை இயைபின்மையின் இங்கு வெளிப்படாது நின்றன என்க. கொண்ட - நினைதலால் மேற்கொண்ட.
குரிசில் - பெருமையுடையார்; புலவியாற் செய்தவற்றை மனங்கொள்ளாது அன்பு மிகுந்து போந்த நிலைக் குறிப்பு.
செங்கை பற்றிக்கொண்டு மாளிகையுட் சார்ந்தார் - இச்செயலே மனநிலையைப் புலப்படுத்திற்று என்க. அன்பின் முதிர்வு.
காதல் கரைகாணாது - ஊடலை மறந்து கூடற்கட் சென்ற மனநிலையாலாகியது என்பர் முன் உரைகாரர்.