பாடல் எண் :3535

இருவருந் தம்பி ரானார் தாமிடை யாடிச் செய்த
திருவருட் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றிச்
சிந்தை
மருவிய வின்ப வெள்ளத் தழுந்திய புணர்ச்சி வாய்ப்ப
ஒருவரு ளொருவர் மேவு நிலைமையி லுயிரொன் றானார்.
381

(இ-ள்) இருவரும்....போற்றி - (நம்பிகளும் பரவையாரும் ஆகிய) இருவரும் தமது பெருமானார் தாம் இருவரினிடையே போந்து தம்பாற் செய்த திருவருட் கருணைப் பெருக்கினது திறத்தைத் துதித்து; சிந்தை...வாய்ப்ப - மனத்துள்ளே பொருந்திய இன்பப் பெருக்கினுள்ளே அழுந்திய ஒன்றிய நிலை சார்தலினாலே; ஒருவருள்...ஒன்றானார் - ஒருவருள்ளே ஒருவர் பொருந்தும் நிலைமையில் இருவர்களும் கூடி உயிர் ஒன்றாக ஆயினர்.
(வி-ரை) இடையாடி - இருவர்பாலும் இங்குமங்குமாகச் சென்று பிணக்கு நீங்கச் செய்த; "நடுவிடையாடி" (1643).
திருவருட் கருணை வெள்ளத்திறம் - அருள் - கருணை - ஒரு பொருளன; அருள் -எல்லா உயிர்களின் மேலும் செல்வது;கருணை - அது கூர்ந்து சிறப்பிற் புலப்பட வருவது; "அருள் வித்திட்டுக் கருணைநீர் பாய்ச்சி" (குமரகுரு); வெள்ளம் -பெருக்கு; திறம் - இருவர்பாலும் தனித்தனி சென்றது இருவரையும் கூட்டும் ஒரே நிலை பற்றியாகலின் திறம் - என ஒருமையாற் கூறினார்.
போற்றி - கூடல் நீங்கிச் சேர்ந்த நிலையில் முதற்கண் நிகழ்ந்தது இறைவர் அருளைப் போற்றுதலேயாம்; இஃது அடிமைத்திறம் பூண்ட அன்பினில் ஊறித் தம் வசமற்ற வாழ்க்கையுடையாரிடமே யன்றிப் பிறர்பாலியலாதென்க.
சிந்தை....வாய்ப்ப - இன்பவெள்ளத் தழுந்திய - மனநிலையே தாமாக அதனுள் மூழ்கிய; புணர்ச்சி - உள்ளக் கலப்பு.
அழுந்திய - மூழ்கும்படி என்பர் முன் உரைகாரர்.
வாய்ப்ப - வாய்த்தலால்.
ஒருவருள்....உயிர் ஒன்றானார் - இவர் நிலையினுள் அவரும் அவர் நிலையினுள் இவருமாக ஒன்றுதல்; ஒன்றுதல் - இரண்டறுதல்; "ஒன்றி யிருந்து நினைமின்கள்" (தேவா); உயிர் ஒன்றாதல் - ஆன்மநேயக் கலப்பு; "ஒருவரொருவரிற் கலந்த வுணர்வால்" (3414) "அன்பு பெருகத் தழுவவிரைந் தவரு மார்வத் தொடுதழுவ, வின்ப வெள்ளத் திடைநீந்தி யேற மாட்டா தலைவார்போல், என்பு முருகி யுயிரொன்றி யுடம்பு மொன்றா மெனவிசைந்தார்" (3812-கழறிற்-65); "சேரர் பெருமா னெதிர்சென்று, தலைநாட் கமலப் போதனைய சரணம் பணியத் தாவில் பல, கலைநாட் டமுத வாரூர் தாமுந் தொழுது கலந்தனரால்" (4247- வெள்.சருக்.19); "சிந்தை மகிழுஞ் சேரலனார் திருவா ரூர ரெனுமிவர்கள், தந்த மணி மேனிகள்வேறா மெனினு மொன்றாந் தன்மையராய், முந்த வெழுங்கா தலிற்றொழுது முயங்கி" (4248 - வெள்.சருக். 20) என்ற நிலைகளில் இக்கருத்தை ஆசிரியர் நன்கு விளக்குதல் காண்க. ஈண்டு இவ்வாற்றான் ஒருமைப் படுத்திக் கூறிய தன்மை தெய்வ அருட் கவியின் பெருமித மாட்சி என்க. "பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்" (327) "சரணார விந்தமலர், சென்னியிலுஞ் சிந்தையிலு மலர்வித்து...மின்னிடையா ளுடன்கூடி விளையாடிச் செல்கின்றார்" (328) என்ற அளவில் முன்னருங் கூறி யமைந்த அருட்கவி மாட்சிமையும் ஈண்டு வைத்துக் கண்டுகொள்க. "காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவ, ராகத்து ளோருயிர் கண்டனம்" (திருக்கோவை-71) என்ற கருத்து ஈண்டு வைத்து சிந்திக்கத்தக்கது.