பாடல் எண் :3536

ஆரணக் கமலக் கோயின் மேவிப்புற் றிடங்கொண் டாண்ட
நீரணி வேணி யாரை நிரந்தரம் பணிந்து போற்றிப்
பாரணி விளக்குஞ் செஞ்சொற் பதிகமா லைகளுஞ்
சாத்தித்
தாரணி மணிப்பூண் மார்பர் தாமகிழ்ந் திருந்த நாளில்,
382

(இ-ள்) ஆரண....போற்றி - வேதமூலம் வெளிப்படும் பூங்கோயிலின் கண்ணே பொருந்திப் புற்றினை இடமாகக்கொண்டு ஆட்சிபுரியும், கங்கையை அணிந்த சடையாரை இடைவிடாது வணங்கித் துதித்து; பார்...சாத்தி - உலகத்தை அழகு விளங்கச் செய்யும் திருப்பதிகங்களாகிய மாலைகளையும் சாத்தி; தாரணி...நாளில் - தாமரை மலர் மாலையினை அணிந்த மணியாரங்களைப் பூண்ட மார்பினையுடைய நம்பிகள் தாம் மகிழ்ச்சியுடனே அங்கு வீற்றிருந்த நாட்களில்,
(வி-ரை) ஆரணக் கமலக் கோயில் - ஆரணம் - வேதம். "வேத மூலம் வெளிப்படு மேதினிக், காதன் மங்கை யிதய கமலமரம்" (43) என்ற கருத்து; ஆண்டுரைத்தவை பார்க்க.
கமலக் கோயில் - பூங்கோயில்; வேதம் புகழும் கமலாலயம் என்பர் முன் உரைகாரர்.
ஆண்ட - ஆட்சிபுரிகின்ற; "ஆரூராண்ட அயிரா வணமே" (தேவா).
நீரந்தரம் - பணிந்து போற்றி - சாத்தி - எப்போதும்; வழிபடுங் காலமெல்லாம்; முன்னரும் "தன்னையா ளுடையபிரான் சரணார விந்தமலர், சென்னியினுஞ் சிந்தையினு மலர்வித்து....சாத்தி" (328) என்ற நிலை காண்க.
நாளில் - அக்காலத்தில் மேல்வரும் நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன; அவையாவன; என்க.