நம்பியா ரூரர் நெஞ்சி னடுக்கமொன் றின்றி நின்று தம்பிரா னாரைத் தூது தையல்பால் விட்டா" ரென்னும் இம்பரின் மிக்க வார்த்தை யேயர்கோ னார்தாங் கேட்டு வெம்பினா; ரதிச யித்தார்; வெருவினார்! விளம்ப லுற்றார், | 383 | (இ-ள்) நம்பியாரூரர்...விட்டார் என்னும் - ஆரூராகிய நம்பிகள் சிறிதும் மனநடுங்காமல் அச்சமின்றி நின்று தமது பெருமானாரை ஒரு பெண்ணிடத்துத் தூது விட்டார் என்கின்ற; இம்பரின் மிக்க வார்த்தை - இவ்வுலகிலே பரந்த பழிச் சொல்லை; ஏயர்கோனார் தாம்....விளம்பலுற்றார் - ஏயர்கோன் கலிக் காமனார் தாம் கேட்டு மனம் புழுங்கினார்; அதிசயப்பட்டார்; அச்சங்கொண்டார்; மேல் வருமாறு சொல்லத் தொடங்கினார், (வி-ரை) நெஞ்சில் நடுக்கம் ஒன்று இன்றி - நெஞ்சில் நடுக்கமாவது செய்யத் தகாத செயல் செய்தலில் மனம் துணியாது நடுங்குதல். தீவினையஞ்சுதலால் வருவது;ஒன்று - ஒன்றும் - ஒரு சிறிதும் என்னும் பொருளில் வந்தது. முற்றும்மை தொக்கது. தம்பிரானாரைத் தூது தையல்பால் விட்டார் என்னும் இம்பரின் மிக்க வார்த்தை - தம்பிரானாரை அடியார் தூது விட்டமை ஒரு பிழை; அதுவும் தையல்பால் விட்டார் என்பது மற்றொரு பெரும்பிழை என்பார், தூது தையல்பால் என மாற்றி உரைத்தார்; இதனை மேல் இரண்டு பாட்டுக்களிற் பிரித்து விரித்தல் காண்க. இம்பரின் மிக்க வார்த்தை - இவ்வுலகில் மிகுந்த பழிச்சொல். மிக்க - பழிப்பால் மிகுந்த; "பழியும் புகழும் பெருக்கில் பெருகும்" (கோவை) என்றபடி பழிச்சொல் இவ்வுலகில் விரைவிற் பரவும் தன்மையுடையது என்பது குறிப்பு. வெம்பினார்...அதிசயித்தார் - வெருவினார் - வெம்புதல் - இத்தகைய தகாத செயலும் செய்யலாமோ என மனம் வெதும்புதல் - புழுங்குதல் - மிக்க சினங்கொள்ளுதல்; அதிசயித்தல் - இன்றளவும் கேட்டுமறியாததென்று வியப்பு அடைதல்; வெருவுதல் - இது நினைத்தற்கும் கேட்டற்கும் ஒண்ணாத தென அஞ்சுதல்; வெரு - சடுதியில் நேரும் அச்சம். "வெருக் கொண்டாற் போலழுவர் குறிப்பயலாய்" (1953). (1) தையல்பால் தூது விட்டமை பற்றி அச்சமும், (2) அடியான் சொற்படி ஆண்டான் சென்றமை பற்றி அதிசயமும், (3) ஆண்டானை அடியான் ஏவியது பற்றி அச்சமும் கொண்டார். விளம்பலுற்றார் - மேல் வருமாறு சொல்லத் தொடங்கினாராகி, |
|
|