"நாயனை யடியா னேவுங் காரிய நன்று! சால ஏயுமென் றிதனைச் செய்தான் றொண்டனா! மென்னே? பாவம்! பேயனேன் பொறுக்க வொண்ணாப் பிழையினைச் செவியாற் கேட்ப தாயின பின்னு மாயா திருந்ததென் னாவி!"யென்பார், | 384 | (இ-ள்) நாயனை...நன்று - தலைவரை அடியவன் ஏவுதல் செய்யும் தொழில் மிக நன்று!; சால....தொண்டனாம் - மிகப் பொருத்தமாவதென்று இக்காரியத்தைத் துணிந்து செய்பவனும் ஒரு தொண்டன் எனப்படுவானாம்!; என்னே பாவம் - இது என்ன பாவம்; பேயனேன்....ஆவி என்பார் - நான் பேயேனாதலின் பொறுக்க வொண்ணாததாகிய இப்பெரும் பிழையினைக் காதினாற் கேட்க நேர்ந்த பின்பும் எனது உயிர் நீங்காது இருந்தது என்பாராகி, (வி-ரை) நாயன் தலைவர்; எசமானர். நன்று - இழிவுக் குறிப்புத் தந்து நின்ற பழிச்சொல்; நன்று - தீது என மறுதலைப் பொருள் தந்து நின்றது; காரியம் - செயல் என்ற பொருளில் வந்தது. சால ஏயும் என்று - மிகவும் பொருத்தமுடையதென்று கொண்டு; எண்ணி; ஏய்தல் - பொருந்துதல். சால நன்று - மிக நன்று என்பதுமொன்று. தொண்டனாம் - ஆம் - சினத்தினால் எதிர்மறைப்பொருளில் வரும் வியப்புக் குறிக்கும் இடைச்சொல்; "விறலில் மேதகு மவுணராம் வலியிலார் மிகவும், வறியராகிய தேவரா மேலவர்" என்ற கந்தபுராணம் காண்க; ஆம் - தகுதியின்மைப் பொருள் தரும் இடைச் சொல்லுமாம். என்னே பாவம் - இஃது எத்தனை பெரும் பாவச் செயல். பேய்னேன்...ஆவி - பேய்னேன் - பேய்த் தன்மையுடையேன்; பேய்த் தன்மையாவது மெய்யுணர்ச்சியின்றி வெறுவியதாத் திரிதல்; "பித்தனேன்பேதையேன் பேயே னாயேன் பிழைத்தனகள்" (தேவா); கேட்கவுந் தகாத பெரும் பிழையாகிய சிவாபராதத்தைக் கேட்ட பின்னும் உயிர் போகாது உடல் தாங்கி நிற்றல் இங்குப் பேய்த்தன்மையாகிய மெய்யுணர்ச்சியின்மை எனப்பட்டது. இதனைப் பொறுக்கவொண்ணா....ஆவி ஆதலின் பேயனேன் எனக் காரணப் பொருள்பட மேற்றொடர்ந்து கூறுதல் காண்க. பொறுக்க வொண்ணா - தீர்வு தேடாது உடல் தாங்கலாகாத; பொறுத்தல் - உடல் தாங்குதல். பின்னும் - உம்மை இழிவு சிறப்பு. கேட்பதாயின் பின்னும் என் ஆவி மாயாதிருந்தது - என்க. தகாத கேள்வி கேட்ட மாத்திரையில் உயிர் போதல் தலையன்பின் றிறம்; இதனால் தலையன்பின்மை தெரிந்தமையால் பேயனேன் என்றார்; இருந்தது - என் ஆவி - எழுவாய் பின் வந்தது இழிவு மிகுதிக்கண் வந்த விரைவுக் குறிப்பு. உயிர் மாயாது தாழ்த்திருந்த தாமத நிலை குறிப்பார் கேட்ட என்றொழியாது செவியாற் கேட்பதாயின என்று நீட்டித்தார். "கண்டு இங்குநின் றங்குவந் தத்துணையும் பகர்ந்த" என்ற திருக்கோவையாரின் குறிப்புப் போல. கேட்பது - கேட்பதென்பது. ஆயினபின்னும் - நேர்ந்த பிறகும்; செவியால் என்பது வேண்டாது கூறலாகிய விதப்பு மொழி; இச்செவி இக் கொடுமொழியைக் கேட்க என்ன தீவினை செய்ததோ என்ற குறிப்புப்பட நின்றது; "விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்"; "வழுக்கியும் வாயாற் சொலல்" என்றார்போல; இருந்தது - இருந்ததே என்க; என்பார் - என்று வருந்திக் கூறுவாராகி. |
|
|