"காரிகை தன்பாற் செல்லுங் காதலா லொருவ னேவப் பாரிடை நடந்து செய்ய பாததா மரைக ணோவத் தேரணி வீதி யூடு செல்வது வருவ தாகி ஓரிர வெல்லாந் தூதுக் குழல்வரா மொருவ!" ரென்று, | 385 | (இ-ள்) காரிகை....என்று - ஒரு பெண்ணினிடத்துச் சாரும் காதல் காரணமாக ஒருவன் ஏவியதனால் அதற்குட்பட்டு நிலத்தின் மேல் நடந்து சென்று செம்மையாகிய திருவடித் தாமரைகள் நோம்படி, தேர் செல்லும் அணிவீதியின் வழியே போவதும் வருவதுமாகி ஒரு இரவு முழுமையும் ஒப்பற்ற ஆண்டவர் தூதாக உழல்வாராம்! என்று கூறி, (வி-ரை) ஏவ - ஏவியதனாலே. காரிகை.....காதலால் - பெண்ணிடத்துச் சாரு மாசையால் என இழிவுக்குறிப்பும், ஒருவன் என இகழ்ச்சிக்குறிப்பும் படக் கூறியதாம். காதலால் ஏவ - பெண்ணிடம் சாரும் ஆசையால் மயங்கி விதி விலக்குக் கடந்து ஏவ என்பதாம். நோவ நடந்து - செல்வதும் - வருவதும் ஆகி - என்க; அருமைபட இரங்கிக் கூறியதாம். பாத தாமரை - தாமரை போன்ற பாதம்; தாமரை மலருக்காயிற்று. தேரணி வீதியூடு - தேரிலும் ஏனைய அயிராவணம், இடபம் முதலிய ஊர்திகளிலும் ஊர்ந்து செல்வதன்றி இறைவரை நிலமுற நடந்து செல்லக் கண்டறியாத வீதியில் என்பது குறிப்பு. தேரோடுகின்ற அழகிய திருவீதி; "ஆழித்தேர் வித்தகன்" (தேவா). ஒருவர் ஓர் இரவெல்லாம் உழல்வராம் - என்க; ஒருவர் ஒப்பற்றவர் என்ற அருமைப்பாடு; முன் ஒருவன் என்றும், இங்கு ஒருவர் என்றும் கூறும் வேற்றுமை கண்டு கொள்க. உழல்வராம் - ஒருவன் ஏவ - ஒருவர் நடந்து - இரவெல்லாம் உழல்வாராம்; இதுவும் செய்யத் தகுந்ததொரு காரியமாமோ! என்று செற்றமும் பரிவும் பற்றி அச்செயலைப் பன்னிப் பன்னிக் கூறியது. ஓர் இரவெல்லாம் - என்றது கால நீட்டிப்பையும், வீதியூடு - என்றது இடநீட்டிப்பையும், பாத தாமரை நோவ நடந்து - என்றது முயற்சி நீட்டிப்பையும், செல்வது வருவதாகித் தூதுக்கு உழல்வதாம் - என்றது செயல் நீட்டிப்பையும் செயலின் தாழ்வு நீட்டிப்பையும் குறிப்பாலுணர்த்தின. |
|
|